குஜராத்தில் குடும்ப தகாராறில் தனது சொந்த மகளையே தந்தை 25 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் சமீபத்தில் 16 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் 40 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அந்த சம்பவம் மீதான cctv காட்சிகள் இணையத்தில் பரவி அனைவரையும் பதைபதைக்க வைத்தது.
இந்த நிலையில், அதே போன்று ஒரு படுகொலை சம்பவம் குஜராத் மாநிலத்திலும் அரங்கேறியுள்ளது.
குஜராத்தின் சூரத் நகரில் வசித்து வரும் 45 வயதாகும் ராமானுஜ் சாஹூ என்ற நபருக்கு ரேகா என்ற மனைவியும், மகன்களும், சாந்தா என்ற 19 வயது மகளும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி அன்று இரவு நேரத்தில் மொட்டை மாடியில் படுத்து தூங்குவது தொடர்பாக ராமானுஜுக்கும் அவரது மகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த தகராறில் அவருடைய மனைவியும் மற்ற மகன்களும் தலையிட்டு தடுத்த நிலையில் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மகளை சரமாரியாக குத்தி தாக்கியுள்ளார்.
அதனைப் பார்த்து அதிர்ச்சியில் பதறிப்போன பெண்ணின் தாய் ரேகா மகளை காப்பாற்ற குறுக்கே பாய்ந்து தடுத்ததால் அவரையும் தாக்கியுள்ளார். அப்போதும், ஆத்திரம் அடங்காத ராமானுஜ் தனது மகளை ஆத்திரம் தீர கத்தியால் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் வீழ்ந்த இளம்பெண் சந்தா பரிதாபமாக சமபவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அப்போதும், கோபம் அடங்காத ராமானுஜ் தனது மனைவியின் இரண்டு விரல்களையும் வெட்டியுள்ளார். அதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து ராமானுஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், அவரது மனைவி ரேகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தின் பதைபதைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.