ITamilTv

ராஜராஜ சோழன் இந்துவா? வரலாற்றில் இருப்பது என்ன?

Spread the love

ராஜராஜ சோழனின் (rajaraja cholan) மதம் குறித்து சமூகவலைத்தளங்கள் தொடங்கி, திரும்பும் திசையெல்லாம் பல்வேறு விவாதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் யார் என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு.

ராஜராஜ சோழன் தொடர்பாகச் சமீபத்தில் இயக்குநர் மணிரத்னத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் (Ponniyin selvan) படத்தில் இடம்பெற்ற பல தகவல்களும், விவரங்களும் அந்தப் படம் திரைக்கு வந்த பிறகு பல தலைப்புகளில் விவாதங்கள் நடந்து வருகிறது.

rajaraja cholan
மாமன்னன் ராஜராஜன் சோழன்.

தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு, கி.பி. 985 ஆம் ஆண்டு சிறிய உத்தம சோழனைத் தொடர்ந்து நாட்டின் அரியணையில் ஏறி, இந்தியா உள்படப் பல நாடுகளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, 29 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த மாமன்னன் ராஜராஜன் சோழன்.

ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் காந்தளூரில் நடைபெற்ற போரில், சேரனுக்கு உதவ வந்த பாண்டிய மன்னனையும் வெற்றி கொண்டு அவர்களது இருமுடிகளையும் கைப்பற்றியதால், மும்முடிச்சோழன், ராஜராஜன் என்ற பெயர்கள் அவரது உண்மை பெயரான அருள்மொழி வர்மன் என்ற பெயரே மறந்துவிடும் அளவிற்கு வரலாற்றில் நிலைபெற்று விட்டது.

சோழநாட்டின் தலைநகரான தஞ்சையில் அவர் கட்டி எழுப்பிய திருக்கோயில்தான், உலக அதிசயங்களில் ஒன்றான தஞ்சை பெரிய கோயில். தீவிர சிவபக்தனான மாமன்னன் ராஜராஜ சோழன் சைவ சமயத்தைப் பின்பற்றியதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

கி.பி. 985 ஆம் ஆண்டு சிறிய உத்தம சோழனைத் தொடர்ந்து நாட்டின் அரியணையில் ஏறிய ராஜராஜ சோழனின் காலத்தில் சைவ, வைணவ மதங்களே முதன்மை மதங்களாக இருந்தன.மேலும்,கெளமாரம், சௌரம், காணாபத்தியம், சாக்தம், சமணம், பவுத்தம் ஆகியவையே ராஜராஜன் சோழன் வாழ்ந்த காலத்தில் பின்பற்றப்பட்ட சமயங்கள்.ராஜ ராஜ சோழன் காலத்தில் சிவன் கோவில்களில் பின்பற்றப்பட்ட மதம் சைவ மதம்தான் என்கிறார் ‘இராஜராஜம்’ என்ற நூலை எழுதிய வெ. சிவகுமார்.

அதேபோல், விஷ்ணுவை வழிபடுவது வைணவம் என்றும், முருகனை வழிபடுவது கெளமாரம், கணபதியை வழிபடுவது காணாபத்தியம், சக்தியை வழிபடுவது சாக்தம், சூரியனை வழிப்படுவது சௌரம் என வழங்கப்பட்ட காலம் அது. பவுத்தமும், சமணமும் அழிவை நோக்கிச் சென்ற அக்காலத்தில், கடவுளை வணங்காமல் சித்தர்கள் வாழ்ந்ததாகவும் கல்வெட்டுகள் கூறுகின்றன.

சர வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயர்தான் முதன்முதலில் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களைக் குறிப்பிட, இந்து என்ற சொல்லைப் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. பலவிதமான கடவுள்களை வணங்கும் மக்களை, ஒரே பிரிவாகச் சேர்த்து அழைக்க இந்து என்ற சொல்லை ஆங்கிலேயர்கள்தான் குறிப்பிட்டார்கள் என்கிறார்கள் பலர்.

மேலும், சிந்து நதி பகுதியில் வசிப்பவர்கள் என்ற பொருளுடன் அவர்கள் வழங்கிய பெயர், சிறிது சிறிதாக மருவி இந்து என மாறிவிட்டதாகக் கூறுகிறார்கள் வரலாற்று அறிஞர்கள்.ஆனால், சைவம், வைணவம் மதங்களில் உள்ளதுபோல, இந்து என்ற மதத்திற்குத் தனியாக ஒரு வழிபாட்டு முறையோ, முழு முதற்கடவுளோ கிடையாது என்பது அறிஞர்களின் விளக்கம்.


Spread the love
Exit mobile version