Site icon ITamilTv

பி.ஜே.பி. மீண்டும் வெற்றி பெற்றால்? இதுவே கடைசி தேர்தல்.. -கீவீரமணி எச்சரிக்கை!!

Spread the love

நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி. மீண்டும் வெற்றி பெற்றால் இதுவே கடைசி தேர்தல் என்று திராவிட கட்சி தலைவர் கீவீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:மத்தியில் ஆட்சி அமைத்து கடந்த 9 ஆண்டுகளுக்குமேல் வெறும் வாக்குறுதிகள், வாய்ச்சவடால், வாய்ச் சாலங்கள், வம்படி திசை திருப்பல்கள்மூலமே ஆட்சியை வெறும் ‘‘காட்சி’’யாகவே நடத்திவரும் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியின் ஒப்பனை அரசியல் அரிதாரம் – நாளும் கலைந்து கரைந்து அதன் உண்மையான கோரம் மிகுந்த ஆரிய முகத்தை வாக்காளர்கள் அப்பட்டமாகப் புரிந்துகொண்டு, நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் எப்பொழுது வந்தாலும், பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். ஆட்சிக்கு விடை கொடுத்தனுப்பும் முடிவுக்கு வந்துவிட்டனர் .

இதுவரை தாங்கள் கூறிய தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் வெற்று ஏமாற்றுப் பொய் வாக்குறுதிகள் என்பதை வாக்காளர்களான மக்கள், குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள், தாய்மார்கள் நன்றாகப் புரிந்துகொண்டு விட்டனர்.ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்புத் தருவோம் என்றீர்களே, வேலை வாய்ப்பு எங்களுக்கு ஏன் கிட்டவில்லை? என்று கேட்காமல் கேட்டு, ஒப்பனையை அவர்தம் வழியும் கண்ணீரால் நாளும் அழிந்து போகச் செய்கின்றனர்.

பி.ஜே.பி. ஆட்சியில் ஊழல்கள் – விலைவாசி உயர்வு போன்ற அவலங்கள்:

கருப்புப் பணத்தை மீட்டெடுத்து உங்கள் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் நபருக்கு 15 லட்சம் ரூபாய் வந்து ‘பொத்’தென்று விழும் என்று நாக்கில் தேன் தடவி, நம்பிக்கை மழை பொழிய வைத்து, நாடாள வந்த நயவஞ்சகர்களே, எங்கே எங்களுக்கு அத்தொகை என்ற கேள்வி கேட்டுத் துளைத்துக் களைத்துச் சளைத்துவிட்டனர்.

விலைவாசிகளின் ஏற்றம் விண்ணை முட்டுகிறது; வேலையில்லாத் திண்டாட்டமோ நாளும் கூடுதலாகி வேலைகிட்டாதோர் பட்டியல் விம்மிப் பெருகுகிறது ஒவ்வொரு நாளும்.

மணிப்பூர் பற்றி எரிகிறது – கடந்த 4 மாதங்களாக! அதை அணைக்கவேண்டிய ஆளுங்கட்சியோ, உயர்ஜாதி ஆதரவினைப் பெற ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்கள் மானபங்கப்படுத்தப்படுவதைக்கூட கண்டும், தடுப்பும், தண்டனைகளும் தர ஏற்பாடுகள் எதுவும் இல்லை.

உலகம் சுற்றி, சர்வதேசப் புகழ் நாடும் பிரதமர், மணிப்பூர் மண்ணில் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போதிய ஆறுதல் கூறி, புதிய நம்பிக்கையை அவர் தரத் தயாராக இல்லை – மாறாக, கண்டுகொள்ளாத இப்படி ஒரு ‘‘கருணையிலா ஆட்சியா?’’ என்று மக்கள் மனம் வெந்து பேசுகிறார்கள்.

நடக்கவிருக்கும் தேர்தலில் பி.ஜே.பி. வெற்றி பெற்றால்,இதுவே கடைசி தேர்தலாக இருக்கும், எச்சரிக்கை:

முந்தைய தேர்தல்களில் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான ஆட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததுகூட வெறும் 37 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுத்தான்! அதுவும் பல கட்சிகள் தனித்தனியே நின்று, ஓட்டுகளைப் பிரித்ததனால்தான்.

இப்போது அவர்கள் பலரும் ‘இந்தியா’ கூட்டணியில் ஒருங்கிணைந்து, ‘‘யார் வரக்கூடாது?’’ என்று மக்கள் விரும்புகிறார்களோ, அவ்வாசையை – குறிக்கோளை நிறைவேற்ற ஒன்றுபட்டு களத்தில் நிற்கின்றனர்.
எது அவர்களைப் பிரிக்கிறது என்பதைத் தள்ளி வைத்துவிட்டு, ஒரே இலக்கு – பா.ஜ.க. மோடி அரசு மீண்டும் அரியணை ஏற்றப்படக்கூடாது; ஏற்றப்பட்டால் நடைபெறவிருக்கும் தேர்தலே நாட்டின் கடைசிப் பொதுத் தேர்தலாகிவிடும் – பாசிச வரலாறு தொடங்கிவிடும் அபாயம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version