Site icon ITamilTv

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி!!

Spread the love

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற உள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“தகைமைசால் தலைவராக, எழுத்தாளராக, கவிஞராக, சொற்பொழிவாளராக, திரைக்கதை வசன கர்த்தாவாக, இலக்கியவாதியாக, திரைப்பட தயாரிப்பாளராக, தலைசிறந்த நிர்வாகியாக, தமிழகத்தின் 5 முறை முதலமைச்சராக, உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவரும், அண்ணாவோடு தி.மு.க.வில் தொடர்ந்து பணியாற்றி அவரது மறைவுக்கு பின்னர் தி.மு.க.வின் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து, அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்து, தமிழக வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்களை ஒதுக்கி கொண்டவர் கருணாநிதி.

அவரின் 5-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர், துணை பொதுச்செயலாளர்கள் உள்பட கட்சியின் முன்னணியினர் கலந்துகொள்ளும் அமைதி பேரணி வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகில் இருந்து புறப்படும்.

பின்னர், மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும்.

மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்ட கழக செயலாளர், முன்னாள் – இந்நாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக செயலாளர், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக, பகுதிகழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, தொண்டர் அணி, மீனவர் அணி,

ஆதிதிராவிடர் நல குழு, மகளிர் தொண்டரணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, மருத்துவரணி, பொறியாளர் அணி, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, நெசவாளர் அணி, சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு, வர்த்தக அணி, தகவல் தொழில் நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி அனைவரும் கருணாநிதியின் நினைவை போற்றி அஞ்சலி செலுத்த திரண்டு வர வேண்டும்” அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version