ITamilTv

கவரைப்பேட்டை ரயில் விபத்து!! பதற வைக்கும் டிரோன் காட்சி! தற்போதைய நிலை என்ன?

Kavaripettai train accident

Spread the love

நேற்று கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்கா நோக்கி பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. தமிழ்நாடு, ஆந்திரா வழியாக பீகார் மாநிலம் தர்பங்கா செல்ல வேண்டிய அந்த ரயில் நேற்று இரவு 8.27 மணி அளவில் கவரப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்த போது மெயின் லைனில் செல்வதற்கு பதில் லூப் லைனில் நுழைந்து 75 கிலோமீட்டர் வேகத்தில் லூப் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டன. சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. அதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து உடனடியாக ரயில்வே அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்ட அரசு அதிகாரிகள், ரயில்வே போலீசார், ஆர்.பி,எஃப் போலீசார் ஆகியோர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

தடம்புரண்ட பெட்டிகளில் இருந்து காயமடைந்த பயணிகளை மீட்டு, மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். இதில், 3 பேரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிதுள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை என்றாலும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த அனைத்து பயணிகளும் மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும், மோப்ப நாய்களை கொண்டு தடம்புரண்ட ரயில்களில் இன்னும் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என தேடுதல் பணி நடைபெற்றது.

ரயில் விபத்து நடந்த இடத்தில் ரயில் பெட்டிகள் தாறுமாறாக சிதறிக் கிடக்கின்றன. விபத்தில் ரயில் பாதை மோசமாக சேதமடைந்துள்ள நிலையில், சுமார் 13 பெட்டிகள் தடம் புரண்டதில் 7 பெட்டிகள் ரயில் பாதையின் குறுக்கே உள்ளன. அதனை ராட்சத கிரேன்கள் மூலம் ரயில்வே ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

மீட்புப் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் சுமார் 13 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ரயில் விபத்து நடந்த இடத்தின் டிரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.

அதில், தடம் புரண்ட ரயில் பெட்டிகள், தண்டவாளத்தின் குறுக்கும் நெடுக்குமாக சிதறிக் கிடக்கும் காட்சி, காண்பவர்களை பதற வைக்கும் படியாக உள்ளது.

ரயில் விபத்து ஏற்பட்ட கவரைப்பேட்டை பகுதியில் மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகள் நிறுத்தபட்டுள்ளது. இதனால் இன்று பிற்பகல் வரை மீட்பு பணிகள் நடக்கும் எனத் தெரிகிறது.

இதனிடையே ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், பயணம் செய்ய முடியாதவர்ளை தங்க வைத்து, தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து ரயில் பயணிகளை பிரத்யேக வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version