Site icon ITamilTv

தமிழகத்தில் அதிக தவறுகள் நடைபெற மூலகாரணமாக உள்ள மதுக்கடைகளை தமிழக அரசு படிப்படியாக மூடவேண்டும் – ஜி.கே. வாசன்!!

Spread the love

நெல்லையில், பழங்குடியின இளைஞர்களை தாக்கி நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்த சம்பவம் குறித்து கூறியுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழகத்தில் அதிகமான தவறுகள் நடைபெற மூலகாரணமே மதுக்கடைகள்தான், அவற்றை தமிழக அரசு படிப்படியாக மூடவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்திருப்பதாவது..

“திருநெல்வேலி மாவட்டம், மணி மூர்த்தீஸ்வரம் பகுதியில் வசிக்கும் பட்டியல் சமூகத்தை சேர்ந்த சில இளைஞர்கள் தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்தபோது, அங்கு வந்த 6 பேர்கொண்ட கும்பல், அவர்களை தாக்கி அவர்களின் உடமைகளை பறித்ததுடன் அவர்களை நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று செய்தி வருகிறது.

இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெற பெரிதும் காரணம் மதுவின் தாக்கம். தமிழகத்தில் குடியின் காரணமாக பல்வேறு இடங்களில், கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று குற்றச் செயல்கள் கட்டுப்பாடு இல்லாமல் அதிகரித்துகொண்டே போகின்றன. மதுவை விற்பதே அரசாங்கமாக இருக்கும்போது, இளைஞர்களிடையே எவ்வித பயமும் இல்லாமல் போகிறது.

பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் தாக்கப்பட்டு, அவர்கள் மீது அநாகரிக செயலில் ஈடுப்பட்டவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் தொடராதவாறு உறுதிப்படுத்த வேண்டும். அசம்பாவிதம் நடைபெற போதை ஒரு காரணமாக இருந்தாலும் வேறு ஏதாவது அடிப்படை நோக்கம் இருக்கிறதா என்று கண்டறிந்து குற்றம் இழைத்தவர்களை தண்டிக்க வேண்டும்.

தமிழகம் பல்வேறு ஜாதி, மதங்களை உள்ளடக்கிய மாநிலம், இதில் அனைவரும் இணக்கமான முறையில் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவது வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தில் அதிகமான தவறுகள் நடைபெற மூலகாரணமே மதுக்கடைகள்தான், அவற்றை தமிழக அரசு படிப்படியாக மூடவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version