Site icon ITamilTv

காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமானில் உருவானது : 9 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு..!!

Andaman

Andaman

Spread the love

அந்தமான் கடல் பகுதியில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது புயலாக வலுப்பெற்று 24-ம் தேதி ஒடிசா – மேற்கு வங்க கடற்கரையை நெருங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது :

அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (அக்.22) மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை (அக்.23) புயலாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா – மேற்கு வங்க கடற்கரையை 24-ம் தேதி நெருங்கும்.

தமிழக பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், கர்நாடகா, அதை ஒட்டிய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகின்றன. இதன் காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், 24 முதல் 27-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Also Read : 2 மாதங்களுக்கு ஒருமுறை துவைக்கப்படும் கம்பளிகள் – இந்திய ரயில்வே அதிர்ச்சித் தகவல்..!!

இன்று (அக்.22) திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், நாளை (அக்.23) தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக 100 கி.மீ. வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் அதிகபட்சமாக 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version