மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி. இது, நகர்புற எல்லையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் இருக்க வேண்டும். ஆனால் விதிமுறைக்கு புறம்பாக 2 கிலோ மீட்டர் தொலைவிலேயே சுங்கச்சாவடியை வைத்து உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர் அப்பகுதி மக்கள் .
இந்நிலையில்தான், மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி இன்று (16.04.2024) காலை திருமங்கலம், கப்பலூர் சிட்கோ பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அனைத்து வியாபாரிகள் சங்கம், மோட்டார், வாகன ஓட்டுநர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். எனவே, “இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திருமங்கலம் நகர் பகுதி மற்றும் கப்பலூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும்” என அறிவித்து இருந்தனர் போராட்டக் குழுவினர்.
இதையும் படிங்க:
அதன்படியே, சற்று நேரத்திற்கு முன் துவங்கிய அந்த போராட்ட்த்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் வியாபாரிகளும் கலந்து கொண்டனர். இதனால், திருமங்கலத்தில் உள்ள 2000-க்கு மேற்பட்ட கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் கார், வேன், ஆட்டோக்கள் உள்ளிட்டவை இயக்கப்படவில்லை.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள 450 க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் முழு அடைப்பு போராட்ட்த்தில் கலந்து கோண்டுள்ளனர். இதனால் அங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டக் குழுவினர் கடைகள் தோறும் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:
இது தொடர்பாக கப்பலூர் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் சிலர் நம்மிடம் பேசும் போது, “கடந்த சுமார் 14 ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். இதற்காகவே துவங்கப் பட்டதுதான், சுங்கச்சாவடி எதிர்ப்பு குழு. ஆனாலும், அவ்வப்போது பேச்சு வார்த்தை நடத்தி சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளிப்பதும், பிறகு மீண்டும் வசூல் துவங்குவதுமாகவே இருக்கிறார்கள்.
மத்திய, மாநில அரசுகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் திருமங்கலம் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, சர்ச்சைக்குரிய கப்பலூர் சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறிய அவர்கள், வருகிற 19ஆம் தேதி நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலை புறக்கணிக்க போவதாகவும், இதற்காக தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை அரசிடம் திரும்ப ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறினர்.
தேர்தலுக்கு இன்னும் இரு தின்ங்களே உள்ள நிலையில், திருமங்கலம் பகுதி மக்களின் போராட்டமானது பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மத்திய, மாநில அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.