Tamilnadu

மாம்பழ சின்னம் விவகாரம்..- ராமதாஸுக்கு விழுந்த அடுத்த அடி!

பாமக சின்னமான ‘மாம்பழம்’ சின்னத்தை முடக்கி வைக்கக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மாம்பழ சின்னம் விவகாரம்

பாமக தலைவராக அன்புமணி ராமதாசை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவை ரத்து செய்யவும், தன்னை தலைவராக அங்கீகரிக்கவும், தனது நிர்வாகிகளை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

மேலும், கட்சியின் உள்கட்சி பிரச்சினை தீர்வு காணப்படும் வரை ‘மாம்பழம்’ சின்னத்தை முடக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மனு தள்ளுபடி

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதே விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, அங்கு தீர்வு பெறலாம் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு ராமதாஸ் தரப்புக்கு அறிவுறுத்தியது. மேலும், அந்த மனுவை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்கவும் உத்தரவிட்டது.

உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு

இதன் பேரில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், அன்புமணி ராமதாசுக்கு வழங்கப்பட்ட ‘மாம்பழம்’ சின்னத்தை ரத்து செய்ய மறுத்தது.

அதோடு, தன்னை கட்சித் தலைவராக அறிவிக்க வேண்டும் என்ற ராமதாசின் கோரிக்கையையும் நிராகரித்தது. தேவையான விடயங்களுக்கு தேர்தல் ஆணையத்தை அணுகலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *