சென்னைக்கு 130 கி.மீ. தொலைவில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது :
சென்னையில் இருந்து 130 கி.மீ. தொலைவில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது. புயல் தொடர்ந்து வடக்கு – வட மேற்கு திசையில் நகர்கிறது. இன்று முற்பகல் வட தமிழ்நாடு – தெற்கு ஆந்திர கடற்கரையில் நிலைகொண்டு, கரைக்கு இணையாக வடக்கு திசையில் நகர்ந்து, நெல்லூர் – மசூலிப்பட்டணத்திற்கு இடையே டிசம்பர் 5ம் தேதி நாளை முற்பகலில் கரையைக் கடக்க கூடும்.
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும். வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல், மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்றும் அவரவர் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.