தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இன்று பெரிதும் கை கொடுத்துள்ளதாக தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது . இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடனடியாக பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
முதலமைச்சரின் உத்தரவின் பேரில் இன்று மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வுக்கு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது :
கடந்த 12 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக கொளத்தூர், அடையார் பகுதிகளில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது; மழை நீர் தேக்கத்தை குறைக்கும் அளவிற்கு எடுத்த நடவடிக்கை இன்று பெரிதும் கை கொடுத்திருக்கிறது.
சென்னையில் இருக்கக்கூடிய நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்பட்டு இருந்ததால் இன்று மழை நீர் வேகமாக வெளியேறிக் கொண்டிருக்கிறது.
கடந்த காலங்களில் செம்பரம்பாக்கத்தில் இருந்து 3,000, 4,000 உபரிநீர் வெளியேற்றப்பட்டாலே ஆற்றங்கரையோரம் இருக்கக்கூடிய பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் ஆனால் தற்போது அடையாற்றில் கரையோரம் இருக்கக்கூடிய தடுப்புகளை அகலப்படுத்தி இருப்பதால் இன்று 6,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட போதும் கூட பாதிப்பு ஏற்படவில்லை என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.