கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கொரோனா பெருந்தொற்று தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 476 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 221-பேருக்கும் செங்கல்பட்டில் 95-பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 95 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் நாளொன்றுக்கு 500 பரிசோதனைகள் செய்யப்படுகிறது என்றும் அதனை 1000-ஆகஅதிகரிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்றும் தெரிவித்த அவர், மாவட்டத்தில் மொத்தம் 400 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
தற்போது எவ்வளவு பரிசோதனைகள் செய்யப்படுகிறதோ அதில் 10 சதவீதம் தாண்டும் போது அல்லது தொற்று ஏற்பட்ட இடங்களில் 40 சதவீதத்துக்கும் மேலாக அட்மிஷன் இருக்கிற போது அந்த இடத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் விதிமுறைகளில் ஒன்று.
தமிழகத்தில் அது போன்ற நிலை ஏற்படவில்லை. தற்போது எடுக்க கூடிய பரிசோதனைகளில் 2,3 சதவீதத்திற்கு உள்ளயே பாதிப்புகள் இருப்பதனாலும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது குறைவாக இருப்பதாலும் இது இரண்டுமே அதிகரித்தால் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளது என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.