India Tamilnadu

30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி “காலி” … அனலாய் எரியும் எதிர் கட்சிகள்… அடம்பிடிக்கும் மத்திய அரசு!

amithsha

ஊழல் குற்றச்சாட்டுகள் அல்லது பிற கடுமையான குற்றங்களுக்காக, தொடர்ச்சியாக 30 நாட்கள் சிறையில் இருந்தால் அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் பிரதமரை பதவி நீக்கம் செய்ய கூறும் அரசியலமைப்பு (130வது திருத்த சட்ட ) மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவையில் நேற்று அறிமுகப்படுத்தினர். அரசியலில் நேர்மையைப் பேணுவதற்காக இந்த மசோதா கொண்டுவரப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு எதிர்கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த சட்டம் “கடுமையானது” மற்றும் “அரசியலமைப்புக்கு எதிரானது” என எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினர். மேலும், பாஜக அல்லாத முதலமைச்சர்களை சிக்க வைப்பதற்கும், அவர்களை சிறையில் அடைப்பதற்கும், மாநில அரசுகளை சீர்குலைப்பதற்கும் ஆளும் பாஜக திட்டமிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியது.

இந்த மசோதைவை அறிவிக்கும் போதே மக்களவையில், சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காகிதங்களைக் கிழித்து அமித்ஷா மேல் எறிந்தனர்.  மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்திய ஆளும்கட்சி தவறாகப் பயன்படுத்தவும் இந்தியாவை காவல்துறைக்கு நெருக்கமாக இந்த புதிய சட்டம் கொண்டு செல்லும் எனவும் குற்றம்சாட்டினர்.

amithshah

பாதிப்பு யாருக்கு?

கடந்த 11 ஆண்டுகளில், பதவியில் இருக்கும் அமைச்சர்கள் மட்டும் குறைந்தது 13 முறை கைது செய்யப்பட்டுள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை அமலாக்க துறை மற்றும் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, 10 பேர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீன் பெறவும்  கடுமையான நிபந்தனைகள் உள்ளன.

இந்த அமைச்சர்களில் சிலர் 30 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்தனர். அவர்களில்  ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்த டெல்லியிலும் , திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்திலும் கைது செய்யப்பட்டனர். ஆனால், இதில் யாரும் பாஜக அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அல்ல. தமிழகத்திலிருந்து 30 நாட்களுக்கு மேலாக திமுக- வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் காலம் கழித்தார்.

2014 ஆம் ஆண்டு அதிமுக அரசாங்கத்தின் கீழ் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது, வேலைகளுக்கு லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான PMLA இன் கீழ் தமிழ்நாடு காவல்துறை மற்றும் அமலாக்கத்துறை இவரை கைது செய்த்தது.

இதில், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. தற்போதும் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.  ஜூன் 2023 இல், அவர் தமிழக மின்சார அமைச்சராக இருந்தபோது கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார், உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கிய பிறகு செப்டம்பர் 2024 இல் விடுவிக்கப்பட்டார். நீதிமன்றக் காவலின் முதல் மாதத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

Senthil balaji

2023 – ல் உயர்கல்வி அமைச்சராக இருந்த பொன்முடி அளவுக்கு மீறிய சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். 2011 -2012 காலகட்டத்தில், நகர்ப்புற நிர்வாக அமைச்சராக இருந்த கே. என். நேரு மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் நில அபகரிப்பு வழக்கில்  கைது செய்யப்பட்டனர். 

அதே காலகட்டத்தில் கிரானைட் முறைகேடு வழக்கில் பொது பணிகள் துறை அமைச்சர் எ.வ வேலு கைது செய்யப்பட்டார். இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளில், செந்தில் பாலாஜியை தவிர வேறு யாரும் தமிழகத்தில் 30 நாட்களுக்கும் மேல் சிறை தண்டனை அனுபவிக்கவில்லை.

மசோதா சட்டமாகும் வாய்ப்பு எவ்வளவு?

அரசியலமைப்பு திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கினர் பெரும்பான்மையாக நிறைவேற்ற வேண்டும்.  பின்னர் அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். தற்போது, ​​மக்களவையில் 542 உறுப்பினர்கள் உள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு, குறைந்தபட்சம் 361 வாக்குகள் தேவை. 293 வகுக்களைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இது ஒரு சவாலாக இருக்கும்.  கூட்டணி இல்லாத கட்சிகள் ஆதரித்தாலும், தேவையான வாக்குகள் கிடைப்பது கடினம்.

மாநிலங்களவையிலும் இதே நிலைமையே உள்ளது. மாநிலங்களவையில் இப்போது 239 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் மசோதாவை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு 160 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 132 வாக்குகள் உள்ளன, இது இலக்கை விட மிகக் குறைவு. எதிர்க்கட்சியின் ஆதரவு இல்லாமல் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாது என்பதே இதன் சாராம்சம்.

ஒருமனதாக, இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் சட்டமாக்கப்படுவதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு கண்டிப்பாக தேவை. எதிர்கட்சிகள் இந்த மசோதாவை முழுவீச்சில் எதிர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *