ITamilTv

கோபி அருகே பழமைவாய்ந்த கோவிலை இடித்து தள்ளிய நபர்..!

Spread the love

கோபி அருகே உள்ள அளுக்குளி என்ற பகுதியில், பல ஆண்டு காலமாக வழிபாடு நடத்தி வந்த முனி கோயில், பொக்லைன் எந்திரம் மூலமாக இடித்து தள்ளியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.

கோபி அருகே உள்ள அளுக்குளியில் சுமார் 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் முனி கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயில் உள்ள இடத்தை அதே பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன் இலவசமாக கொடுத்தார்.

இந்த கோயிலில் 20 அடி உயரத்திற்கு முனி சிலையும், இரண்டு அடி உயரத்திற்கு கருப்பராயன் சிலையும், தண்ணீர் தொட்டியும் கட்டப்பட்டு இருந்தது. இந்த முனி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்வார்கள்.

இந்நிலையில் கோயிலுக்கான இடத்தை இலவசமாக கொடுத்த மூதாட்டியின் உறவினர் பிச்சாண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் பொக்லைன் வாகனத்தின் மூலம் 20 அடி உயர முனி சிலை, கருப்பராயன் சிலை மற்றும் தண்ணீர் தொட்டியை இடித்து அகற்றினார்.

இடித்து அகற்றப்பட்ட முனி கோயில், அளுக்குளி-கோபி

இது குறித்து தகவல் அறிந்ததும் கடத்தூர் போலீசார் உடனடியாக அங்கு வந்து பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் கோயிலுக்கு இடம் வழங்கிய மூதாட்டி வாய்மொழியாகவே கூறி உள்ளதாலும், தற்போது அங்கு நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளதால், கோயிலை இடித்து அகற்றிவிட்டு நிலத்தை எடுத்துக்கொள்ளவே கோயிலை இடித்தது தெரிய வந்துள்ளது. பல ஆண்டுகளாக வழிபாடு செய்து வந்த கோயிலை இடித்து அகற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Spread the love
Exit mobile version