விடுதலைப் போராட்ட வீரர்களை திராவிட இயக்கம் கொண்டாடவில்லை என்பது போன்ற பொய்ப் பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கிறார் கிண்டி மாளிகை ஆளுநர் ஆர்.என்.ரவி. இவருக்கு திராவிட முன்னேற்றக் கழகம் பற்றியும் தெரியாது. விடுதலைப் போராட்டம் பற்றியும் தெரியாது. தமிழ்நாடு பா.ஜ.க.வின் தலைவராக ஆர்.என்.ரவி.தன்னை நினைத்துக் கொண்டு நித்தமும் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்.
கடந்த ஆண்டு இந்தியக் குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெறுவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட ஊர்தியை பா.ஜ.க. அரசு மறுத்தது. இந்திய விடுதலை வேள்விக்காக விறகு சுமந்த மருது சகோதரர்களும், இராணி வேலு நாச்சியாரும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யும், மகாகவி பாரதியாரும்தான் அதில் இடம் பெற்றிருந்தார்களே தவிர, விடுதலைப் போராட்டத்துக்குத் தொடர்பில்லாத யாரும் இடம் பெறவில்லை. ‘இவர்கள் யார்?’ என்று அன்று அதிகாரிகள் கேட்டதாக டெல்லியில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ்களே செய்திகள் வெளியிட்டன.
இவ்விஷயத்தில் பிரதமர் உடனடியாகத் தலையிட்டு, விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். “தமிழ்நாடு அலங்கார ஊர்தி தொடர்பாக, மாநில அதிகாரிகள் 3 முறை குழுவிடம் நேரில் சென்று விளக்கம் அளித்தனர்.
திருத்தங்கள் செய்து தரப்பட்ட 7 மாதிரிகளையும் ஒன்றிய அரசின் குழுவினர் மறுத்ததை ஏற்க முடியவில்லை. அதுவும் 4வது சுற்று கூட்டத்திற்கு தமிழக அதிகாரிகளை அழைக்காமலேயே குடியரசு தின அணிவகுப்புப் பட்டியலிலிருந்து பெயரை நீக்கியிருப்பது வேதனை தருகிறது” எனக் குறிப்பிட்டு இருந்தார். அப்போதும் அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் முதலமைச்சர் அவர்கள் இரண்டு முக்கியமான முடிவுகளை எடுத்தார். இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்கும் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் தமிழ்நாடு முன்மொழிந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் உருவ மாதிரிகளை இந்திய பாதுகாப்புத் துறையின் உயர்நிலைக்குழு கவனத்தில் கொள்ளாத நிலையில்,
அந்தத் தலைவர்களின் விடுதலை வேட்கையைப் பறைசாற்றும் அலங்கார ஊர்தி தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு விழாவில் இடம்பெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்கள். இந்த அலங்கார ஊர்தி தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் மக்களின் பார்வைக்காக அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறியிருந்தார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் இந்த ஊர்தி கடந்த ஆண்டில் வலம் வந்தது. அனைத்து ஊர்களிலும் சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கை எழுச்சியுடன் பறை சாற்றுவதற்கான களம் தமிழ்நாட்டில் அமைந்தது.
இந்த ஆண்டுக்காக குடியரசு தின அணிவகுப்பில் அருந்தமிழ் ஒளவை மூதாட்டி, வீரமங்கை வேலுநாச்சியார், சமூகச் சீர்திருத்த திராவிடத் தாய் மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம், சமூகச் சீர்திருத்த முதல் மருத்துவர் முத்து லட்சுமி, இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி, நாட்டியக் கலைஞர் பால சரசுவதி, இன்றும் வாழும் இயற்கை விவசாயியான பாப்பம்மாள் – ஆகிய ஏழு முகங்களை தமிழ்நாட்டின் முகங்களாக எடுத்துக் காட்டியது தமிழ்நாடு. இவை எல்லாம் ஆளுநருக்குத் தெரியுமா?
நாட்டுப் பற்றில் திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் உறுதியாக இருந்து வந்துள்ளது.சீன நாட்டால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது 1962 ஆம் ஆண்டு, திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு, இந்திய நாட்டின் பாதுகாப்பே முக்கியம் என்று அறிவித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
1971ஆம் ஆண்டு இந்தியாவைப் பாகிஸ்தான் அச்சுறுத்தியபோது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாகிஸ்தான் படையெடுப்பு கண்டனத் தீர்மானம் போட்டவர் முதல்வர் கலைஞர் அவர்கள்.1972 ஆம் ஆண்டு பாகிஸ்தான் போரின் போது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களிடம் நாட்டுப் பாதுகாப்புக்காக ஆறுகோடி ரூபாய் நிதி வழங்கியவர் முதல்வர் கலைஞர் அவர்கள். அன்றைய தினம் அனைத்து மாநிலங்களும் வழங்கிய தொகை மொத்தம் 25 கோடி. அதில் 6 கோடியை வழங்கியது தி.மு.க. அரசு.
அந்தப் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு நிதியும் நிலமும் வழங்கிய அரசு, கலைஞரின் அரசு.1999 ஆம் ஆண்டு கார்கில் போரின் போது அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் மூன்று தவணைகளாக மொத்தம் 50 கோடி ரூபாய் வழங்கிய அரசு, முதல்வர் கலைஞரின் அரசு.எனவே நாட்டுப்பற்றை புதிதாக இங்கு வந்து யாரும் எங்களுக்குப் போதிக்கத் தேவையில்லை என்று கட்டமாக தெரிவித்துள்ளது.