நாமக்கல் மாவட்டம் அடுத்த ராசிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரிடம் லிப்ட் கேட்ட கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவி ஒருவர் நேற்று காலை கரூரில் இருந்து ஆண்டகளூர்கேட் பகுதிக்கு பேருந்தில் வந்துள்ளார். அதன் பின்னர், கல்லூரிக்கு நேரம் ஆனதால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரிடம் லிப்ட் கேட்டுள்ளார்.
அதையடுத்து, அவரை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்ற அந்த இளைஞர் தனது சகோதரி பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருப்பதாக கூறி, வழக்கமான பாதையை தவிர்த்து அணைப்பாளையம் புறவழிச் சாலை வழியாக சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள மலைப் பகுதியில் வைத்து மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமல்லாமல் அவரின் ஆடைகளை கலைத்தெறிந்துவிட்டு அவரிடம் இருந்த 140 ரூபாய் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், பிற்பகல் மூன்று மணியளவில் ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளின் மூலம் விசாரணை மேற்கொண்ட தனிப்படை காவல்துறையினர், நாமக்கல் மாவட்டம் தொப்பப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் மணிகண்டனை என்பவரை 3 மணி நேரத்துக்குள் அதிரடியாக கைது செய்தனர்.
ராசிபுரத்தில் கல்லூரி மாணவி முன்பின் தெரியாத ஒருவரிடம் லிப்ட் கேட்டு சென்றதால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.