itamiltv.com

“ஊழலை ஒழி, சமூக ஊடகத்தை அல்ல…” நேபாள் GENZ வார்ரியர்ஸ் ரைஸ்! அதிகரிக்கும் உயிர்பலி!

நேபாள நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறையின் விதிமுறைகளுக்கு கீழ், அந்த நாட்டில் இயங்கும் சமூக வலைத்தள நிறுவனங்கள் அனைத்தும் பதிவு செய்ய வேண்டும் என நேபாள பிரதமர் கே.பி. சர்மா தலைமையிலான அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.

இதற்காக கொடுத்த காலக்கெடு செப்டம்பர் 3-ஆம் தேதி முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, பதிவு செய்யப்படாமல் இருந்த 26 சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்தது.

இதில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ், யூட்யூப் உள்ளிட்டவை அடங்குகின்றன. பதிவு செய்யாத வரை தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

GENZ என அழைக்கப்படும் இளம் தலைமுறையினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஹமி நேபால் (Hami Nepal) என்ற அமைப்பு இந்த போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

தேசியக் கொடியை ஏந்தி, தேசிய கீதம் பாடி நாடாளுமன்ற வளாகத்தை நோக்கிச் சென்ற போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றதாக காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கலைக்க முயன்றனர்.

“ஊழலை ஒழி, சமூக ஊடகத்தை அல்ல”, “சமூக ஊடகத்தைத் தடையை நீக்கு”, “ஊழலுக்கு எதிரான இளைஞர்கள்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி காத்மாண்டுவில் இவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

சமூக ஊடகத்திற்கு போடப்பட்ட தடையை எதிர்த்து கூடிருந்தாலும் அது மட்டுமே எங்கள் நோக்கம் இல்லை. நேபாளத்தில் நடக்கும் ஊழலுக்கு எதிரான போராட்டம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 87 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தோரின் அடையாளம் இன்னும் தெரியாத நிலையில், காத்மாண்டுவின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் பிற முக்கிய நகரங்களுக்கும் இந்த போராட்டம் பரவி வருகிறது.

Exit mobile version