ITamilTv

பெற்ற மகள் நம்பிக்கைத் துரோகம்-அலைக்கழிக்கும் அரசு நிர்வாகம் – நடுரோட்டில் பரிதவிக்கும் 80வயது மூதாட்டி

old lady 02

Spread the love

பெற்ற மகளின் நம்பிக்கைத் துரோகத்தாலும், அரசு அதிகாரிகளின் அலைக்கழிப்பாலும் நடுரோட்டில் தவித்து வருகிறார் 80 வயது மூதாட்டி. யார் அவர்? அவருக்கு என்ன நேர்ந்தது பார்ப்போம்…

தாயன்புக்கு ஈடேது என்பார்கள். அந்த அன்பின் காரணத்தால், தனக்கு என்று இருந்த ஒரு வீட்டையும் மகளுக்கு கொடுக்க, அந்த மகளால் இன்று நடுரோட்டுக்கு தள்ளப்பட்டிருக்கிறார் 80வயது மூதாட்டி கணபதி அம்மாள்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரண்மனை தெருவில் உள்ள வீட்டில் கணவர் விஜயராமலிங்கம், 3 மகள்கள், 3 மகன்கள் என குடும்பமாக வசித்து வந்தவர்தான் கணபதி அம்மாள்.

பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி அவரவர்கள் தனிக்குடித்தனம் இருந்து வருகின்றனர்.

வயது மூப்பின் காரணமாக கணவர் விஜயராமலிங்கம் காலமான நிலையில், கணபதி அம்மாள், கணவர் தனக்காக கட்டிக் கொடுத்த அந்த வீட்டில் தனியே வசித்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் மூத்த மகள் அங்காள ஈஸ்வரி, கணவனை இழந்து தனிமரமாக இருந்ததால், தன்னுடனே அவரையும் தங்க வைத்துக் கொண்டுள்ளார்.

அங்காள ஈஸ்வரியும், தன் தாயாருக்கு பார்த்து பார்த்து பணிவிடை செய்ததில், மகள் மீது கணபதி அம்மாளுக்கு கரிசனம் கூடியிருக்கிறது.

இதனால் தான் வசித்து வந்த வீட்டை மகள் பெயருக்கே கடந்த 2012ஆம் ஆண்டு இனாம் செட்டில்மெண்ட் போட்டுக் கொடுத்துள்ளார்.

ஆனால் அங்காள ஈஸ்வரி தன் தாய் மீது காட்டியது பாசமல்ல;

இந்த வீட்டை அடைவதற்கான மோசடி என்பது பின்னாளில்தான் கணபதி அம்மாளுக்கு தெரிய வந்திருக்கிறது.

திடீரென ஒருநாள் அங்காள ஈஸ்வரி வீட்டில் இருந்து மாயமாகி விட மகளைப் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் சோர்வுடன் வசித்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் கடந்த 2017ஆம் ஆண்டு, திடீரென்று, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் வந்து அங்காள ஈஸ்வரி இந்த வீட்டை தன்னிடம் விற்று விட்டார்.

பட்டாவும் என் பெயருக்கு மாறுதலாகிவிட்டது. எனவே நீங்கள் இந்த வீட்டை காலி செய்து விடுங்கள் என கண்டிப்பாக பேசி உள்ளார்.

ஆதரவுக்கும், ஆறுதலுக்கும் யாருமில்லாத நிலையில், மகள் செய்த மோசடியால் வீடும் கையை விட்டு சென்றுவிடும் நிலையில் கண்ணீருடன் கதறியிருக்கிறார் மூதாட்டி கணபதி அம்மாள்.

இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் சொன்ன தகவலின் பேரில், பரமக்குடி கோட்டாட்சியர் அலுவலகம் சென்று கணபதி அம்மாள் மனு அளித்துள்ளார்.

மூத்தகுடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு நல்வாழ்வு சட்டம் 2007 அத்தியாயம் 5 பிரிவு 23(i) ன் படி

தாம் தன் மகளுக்கு எழுதிக் கொடுத்த இனாம் செட்டில்மெண்டை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

நடக்கவே முடியாத 80 வயது மூதாட்டி ஒருவர் சொந்த மகளாலேயே ஏமாற்றப்பட்டதை அறிந்த அப்போதைய பரமக்குடி கோட்டாட்சியர் மனு மீதான உடனடி விசாரணை செய்தார்

மேலும், உடனடி தீர்வாக மூதாட்டி, தனது மகள் அங்காள ஈஸ்வரிக்கு கொடுத்த இனாம் செட்டில்மண்டை ரத்து செய்து உத்தரவிட்டவுடன், இவரது பெயருக்கே வீட்டு பட்டாவும் மாறுதலாக நடவடிக்கை எடுத்து உள்ளார்.


அது முதல் மூதாட்டியின் வீடு அவருக்கே சொந்தமாக இருந்து வந்துள்ளது.

இதனால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தவருக்கு மீண்டும் பிரச்சனை வேறு ரூபத்தில் வந்தது.

பரமக்குடி கோட்டாட்சியராக புதிதாக பொறுப்பேற்ற ‘அப்தாப்ரசூல்’ என்பவர் முன்பு இருந்த கோட்டாட்சியர் இனாம் செட்டில்மெண்டை ரத்து செய்ததை இவர் மறு ரத்து செய்து மூதாட்டிக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.


இது தொடர்பாக பலமுறை அவரை நேரில் சந்தித்து தன் நிலை குறித்து எடுத்துக் கூறியும் கோட்டாட்சியர் அப்தாப்ரசூல் செவி சாய்க்க வில்லையாம். அவர் எதிர்மனுதாரிடம் பலன் பெற்றதாக சொல்லப்படுகிறது.

இதனால், தள்ளாத வயதில் நடக்க இயலாமல் இருக்கும் 80 வயது மூதாட்டியை அலைக்கழிப்பு செய்து வருவது பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதுமட்டுமின்றி குடியிருந்த வீட்டையும் இழந்து தற்போது ஆதரவின்றி நடுரோட்டில் தவித்தபடி நிற்கிறார் மூதாட்டி கணபதி அம்மாள்.

பெற்ற மகள் ஒருபக்கம் மோசடி செய்ய, அரசு அதிகாரியின் அலைக்கழிப்பால் தவித்து வரும் தனக்கு நியாயம் கிடைக்குமா என்று மூதாட்டி எழுப்பும் அழுகுரல்

அரசின் செவிகளுக்கு எட்ட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Spread the love
Exit mobile version