மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் நடைபயணத்திற்கு உரிய அனுமதியை உடனடியாக வழங்குவதோடு, பேராசிரியர் திரு.சுல்தான் இஸ்மாயில் அவர்களின் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது..
“மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் பூம்புகாரில் தொடங்கவிருந்த “மண்ணின் மக்களின்” நடைபயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது – நீர்வளத்தையும், நில வளத்தையும் பாதுகாக்க வலியுறுத்தும் நடைபயணத்தைத் தடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
காவிரிப் படுகை முழுவதையும் பாதுகாக்கும் நோக்கத்தில் “வேளாண் மண்டலப் பாதுகாப்பை உறுதி செய்வோம்” எனும் முழக்கத்தை முன்னிறுத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் பூம்புகார் முதல் தஞ்சாவூர் வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நடைபயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விளைநிலங்கள் விளைநிலங்களாகவே தொடர வேண்டும், கடற்பகுதியில் எரிவாயு – எண்ணெய் கிணறுகள் அமைப்பதை தடைசெய்ய வேண்டும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறவிருந்த நடைபயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த பேராசிரியர் திரு.சுல்தான் இஸ்மாயில் அவர்கள் தலைமையிலான குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் அதன் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, நீர்வளத்தையும், நிலவளத்தையும் பாதுகாக்க வலியுறுத்தும் நடைபயணத்திற்கு அனுமதியை தர மறுப்பது எந்த வகையில் நியாயம்? என சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் நடைபயணத்திற்கு உரிய அனுமதியை உடனடியாக வழங்குவதோடு, பேராசிரியர் திரு.சுல்தான் இஸ்மாயில் அவர்களின் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.