சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ரூ.35 லட்சம் வரை இழந்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போரூர் விக்னேஸ்வரா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரபு (39), இவரது மனைவி ஜனனி(என்ற) இந்து(36), குடும்பத்துடன் வசித்து வந்த பிரபு கடந்த ஒரு வருடமாக வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்தினால் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று அவரது மனைவி வெளியே சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது பிரபு நைலான் கயிற்றால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன பிரபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில் பிரபு ஆன்லைனில் ரம்மி விளையாட்டில் ரூ.35 லட்சம் வரை பணத்தை இழந்துள்ளதாகவும் இதனால் கடந்த ஒரு வருடமாக வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். கிரெடிட் கார்டு மூலமாக கடன் பெற்று ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சுமார் 15 லட்சமும் வீடு கட்ட அவரது தந்தை கொடுத்த ரூ.20 லட்சம் என 35 லட்சம் வரை இழந்துள்ளார்.
இதுகுறித்து அவரது மனைவிக்கு தெரியவரவே அவர் வாங்கிய கடனை அடைக்க வங்கியிலிருந்து அழுத்தம் கொடுத்ததால் அந்த பணத்தை செலுத்தி விட்டு வருவதற்காக நேற்று சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது பிரபு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கும் செல்லாமல் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதால் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பிரபுவின் மனைவி போரூர் போலீசில் புகார் அளித்துவிட்டு இது போன்ற ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தமிழக அரசு தடை செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.