Site icon ITamilTv

பாடப்புத்தகங்களின் விலை உயர்வு : தமிழக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்!

TTV Dhinakaran

Spread the love

ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களின் விலையை முன்னறிவிப்பின்றி உயர்த்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..

“கல்வி தான் யாராலும் பறிக்க முடியாத சொத்து என ஒருபுறம் முழங்கிவிட்டு, மற்றொருபுறம் பாடப்புத்தகங்களின் விலையை உயர்த்துவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா ?

தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலமாக அச்சடிக்கப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு விற்பனை செய்யப்படும் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களின் விலை சுமார் 40 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

390 ரூபாயாக இருந்த ஒன்றாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் 550 ரூபாயாக உயர்த்தப்பட்டதில் தொடங்கி, 790 ரூபாயாக இருந்த பத்தாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் 1,130 ரூபாய் என அனைத்து வகையான பாடப்புத்தகங்களின் விலையையும் திடீரென உயர்த்தியிருப்பது தனியார் பள்ளிகளின் நிர்வாகத்திற்கும், அப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கல்வி தான் யாராலும் பறிக்க முடியாத சொத்து என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மேடைக்கு மேடை ஒருபுறம் முழங்கி வரும் நிலையில், மற்றொருபுறம் பாடப்புத்தகங்களின் விலையை உயர்த்தி தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் மற்றும் போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களையும் மேலும் மேலும் சிரமத்திற்குள்ளாக்குவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா ? என மக்களே கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

ஏற்கனவே, திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் அதிகரிக்கும் வேலைவாய்ப்புத் திண்டாட்டம், தலைவர் இல்லாமல் இயங்கும் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் நடத்தும் தேர்வுகளில் ஏற்படும் குளறுபடிகள் என பல்வேறு சவால்களுக்கு மத்தியில் போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தமிழக இளைஞர்களுக்கு உதவும் பாடப்புத்தகங்களின் விலையையும் உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, தனியார் பள்ளி மாணவ, மாணவியர்களில் தொடங்கி அரசுப் பணி கனவில் இரவு, பகல் பாராமல் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தும் பாடப்புத்தகங்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு பாடநூல் கழகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version