தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ள குறுகிய சாலைகளில் மீட்பு பணிகள் மேற்கொள்வது சவாலாக உள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
மீட்பு பணிகள் குறித்து விளக்கம் கொடுத்துள்ள சிவ்தாஸ் மீனா கூறியதாவது :
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் 2 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது .
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க மாநில, தேசிய பேரிடர் மீட்புப் படைகளை சேர்ந்த 818 வீரர்கள் களத்தில் உள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணி நடைபெற்று வருகிறது
மீட்பு பணிகளில் பயிற்சி பெற்ற 100 பேர் களமிறங்கி உள்ளனர் . இதுமட்டுமின்றி 168 ராணுவ வீரர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ள குறுகிய சாலைகளில் மீட்பு பணிகள் மேற்கொள்வது சற்று சவாலாக உள்ளது . ஆனால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.
பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் இருக்க தொடர்ந்து வரலியுறுத்தப்பட்டு வருகிறது. யாரும் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்றும் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.