பொதுப்பணித்துறை பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில், மழைநீர் குழாயில் இருந்து கட்டுக்கட்டாக பணம் விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 15 அரசு அதிகாரிகளை குறிவைத்து 60க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதன்படி கர்நாடக மாநில பொதுப்பணித்துறை பொறியாளரான சாந்த கவுடா என்பருடைய வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையில் அவரிடம் இருந்து சில லட்சம் பணத்தை கைப்பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரது வீட்டின் மாடியில் இருந்து இணைக்கப்பட்டிருந்த மழைநீர் குழாயை சோதனையிட்டனர்.
அந்த குழாய் எவ்வித இணைப்பும் இன்றி தனியாக இருந்ததை கண்டு சந்தேகமடைந்த அதிகாரிகள், குழாயை அறுத்து சோதனையிட்டதில் குழாயிலிருந்து கட்டுக்கட்டாக பணம் விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனை அடுத்து மறைத்து வைத்திருந்த பணத்தை ஒரு வாளியின் மூலம் சேகரித்தனர். இந்த சோதனையில் மொத்தம் ரூ.54 லட்சம் பறிமுதல் செய்ததாகவும் அதில், குழாயில் இருந்து மட்டும் ரூ.13 லட்சம் கைப்பற்றப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி., மகேஷ் கூறியுள்ளார்.