சேலம் அருகே நடந்த கோர சாலை விபத்தில், இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பேருந்து, உத்தமசோழபுரம் அருகே உள்ள சூளைமேடு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த மினி டெம்போ மற்றும் இருசக்கர வாகனத்தில் மோதியது.
இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற மணிகண்டன் மற்றும் அவரது தாயார் இருசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பினர்.
மினி டெம்போவில் பயணம் செய்த 11 மாத குழந்தை ஜீவிகா, 5 வயது நிதிஷ்கா, கர்ப்பிணி பெண் சத்யா உள்ளிட்ட 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி சம்பவ இடத்தை பார்வையிட்டார். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த விபத்துக்கு காரணமான அரசு பேருந்து ஓட்டுநர் அய்யன்துரை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
