போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது என்று ஞானவேல் ராஜாவுக்கு சசிகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பருத்திவீரன் படம் தொடர்பாக இயக்குநர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையேயான பிரச்னை திரைத்துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற பருத்திவீரன் படத்தில் தன் பணத்தை அமீர் பொய்கணக்குக் கூறி திருடிவிட்டதாக ஞானவேல் ராஜா தெரிவித்தது கடும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிஇருந்தார். இதற்கு சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், பாரதிராஜா, சுதா கொங்கரா,பொன்வண்ணன், கவிஞர் சினேகன் உள்பட பலரும் அமீருக்கு ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில், தன்னுடைய வார்த்தைகள் புண்படுத்தும்படி இருந்திருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக ஞானவேல் ராஜா விளக்கம் அளித்து இருந்தார்.
ஞானவேல்ராஜா வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை :
பருத்தி வீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே ‘அமீர் அண்ணா’ என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது.
அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி! அன்புடன் ஞானவேல்ராஜா” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்,போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது. அமீருக்கு ஆதரவாக சசிகுமார் குரல் எழுப்பியுள்ளார். இது குறித்து
சசிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை :
அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன?’நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால்…’ என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் ஞானவேல் ராஜா.
அப்படியெனில் அந்த சில வார்த்தைகள்’ என்ன?திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்னமாதிரியான வருத்தம்?இதன்மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன?பெயரிடப்படாத அந்தக் கடிதம் யாருக்கு? என்று சசிகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.