Tamilnadu

சாத்தான்குளம் வழக்கு: தண்டனை அறிவிப்பு தள்ளிவைப்பு – அரசு அவகாசம் கோரிக்கை!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் கடை நடத்தி வந்தனர்.

2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில், கடையை மூடும் நேரம் தொடர்பாக காவல்துறையினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

சாத்தான்குளம் கொலை வழக்கு

அதன் பின்னர், காவல் நிலையத்தில் நடந்த தாக்குதலால் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. பின்னர் மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசார் கைது செய்யப்பட்டனர். சிபிஐ சார்பில் விரிவான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நீண்டநாள் விசாரணை மற்றும் வாதங்கள் நடைபெற்றன.

அவகாசம் கேட்ட அரசு தரப்பு

இறுதியாக, நீதிமன்றம் இந்த மரணங்கள் காவல்துறை தாக்குதலால் ஏற்பட்டவை என்றும், இது கொலை எனவும் தீர்ப்பளித்தது. சம்பந்தப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.

தண்டனை அளவு குறித்து இறுதி முடிவு எடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகளின் கருத்து கேட்கப்பட்டதால், தீர்ப்பு அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனால், தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *