Site icon ITamilTv

“சிறுநீரை வாயில் ஊற்றி வன்கொடுமை.. சாதியக்கும்பலை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” – வன்னியரசு!!

Spread the love

கோபிச்செட்டிப்பாளையம் அருகே பட்டியலின மாணவர்களை ஆதிக்க சாதியினர் கொடூரமாக தாக்கி சிறுநீரை வாயில் ஊற்றிய கொடூரம் நடந்துள்ளது. மாணவர்களைத் தாக்கிய சாதியக்கும்பலை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது..

“ஈரோடு மாவட்டம் – கோபிச்செட்டிபாளையம் தாலுகாவுக்குட்பட்ட பொலவக்காலி பாளையம்-இந்திரா நகரைச் சார்ந்த நவீன் குமார்,கிருபாகரன் கல்லூரி மாணவர்கள் கடந்த 20.11.2023 அன்று மதுக்கடைக்கு அருகே உள்ள Water tank கீழே அமர்ந்திருக்கிறார்கள். அருகே உள்ள தெருவைச்சார்ந்த சாதியவாதிகள் “ஏண்டா சக்கிலி பயலுகளா இங்க வந்து எதுக்குடா உக்காந்து இருக்கீங்க. இங்க வந்து தண்ணி அடிக்கவா” என மிதித்து அடித்துள்ளனர்.

மாணவர்களிடம் இருந்த பைக்கையும் புடுங்கி சென்றுள்ளனர். பைக் இல்லாததால் வீட்டுக்கு போகாமல் அங்கேயே இரவு படுத்துள்ளனர். மீண்டும் அதிகாலை 6 மணிக்கு வந்த சாதி வெறியர்கள், “ஏண்டா இன்னுமா இங்க இருக்கீங்க” என ராடு வைத்து அடித்துள்ளனர். அடித்த அடியில் பாதி மயக்கமுற்ற மாணவர்கள், தண்ணீர் வேண்டுமென கேட்டிருக்கின்றனர். உடனே, “சக்கிலி பயலுகளா இந்தாடா தண்ணி”என சிறுநீரை கழித்து திணித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் 20 சாதி வெறியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சாதியவாதிகளை கைது செய்யக்கூடாது என இந்து முன்னணி போராட்டம் நடத்தியதால், எந்த சாதி வெறியனையும் போலீசார் கைது செய்யவில்லை. பாதிக்கப்பட்ட மாணவர்களும் இந்துக்கள் தான். ஆனால், இந்து_முன்னணி சாதியவாதிகளுக்கே ஆதரவாக இருக்கிறது.

காவல்துறையும் சாதியவாதிகளுக்கு அஞ்சி கைது செய்யாமல் கட்ட பஞ்சாயத்து செய்து வருகிறது. இப்போக்கை விடுதலைச்சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறோம். சிறுநீரை வாயில் ஊற்றி வன்கொடுமை செய்த சாதியக்கும்பலை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version