தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழம் மற்றும் புதுச் சேரியின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
அதே போல் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது. இதன் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர் மழை பெய்து வருகிறது. அதே போல் காரைக்கால் மாவட்டத்திற்கு உட்பட்ட திருநள்ளாறு, திருப்பட்டினம், அம்பகரத்தூர், கோட்டுச்சேரி, நெடுங்காடு உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக காரைகால் மாவட்டத்தில் இயங்கிவரும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார். இதே போல் புதுச்சேரியிலும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.