சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை (Resignation letter) ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார்.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி போக்குவரத்துக்கழகத்தில் பணி வாங்கி தருவதாக பணம் பெற்றதாக அவர் மீது புகார் எழுந்தது.
இது குறித்த வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே, அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் நிராகரித்த நிலையில், 2-வது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு வரும் பிப்.14-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைக்கும்படி ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரைத்திருந்தார்.
இலாகா மாற்றத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதையடுத்து, செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக அறிவித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டது.
தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது என்பது அரசியலமைப்பு சாசன நெறிமுறைகளுக்கு எதிரானது என கூறியது.
மேலும் அமைச்சரவையில் செந்தில்பாலாஜி நீடிக்க வேண்டுமா என்பதை தமிழக முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.
இதையும் படிங்க : vetri-யின் உடலை மீட்ட நீச்சல் வீரர்களுக்கு ரூ 1 கோடி!
இந்த நிலையில், கடந்த 8 மாதங்களாக இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வந்த செந்தில் பாலாஜி தனது பதவியில் இருந்து விலகுவதாக கூறி தமிழக முதல்வருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பி இருந்தார்.
அதில் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுவதாகவும், தான் நிரபராதி என்ற உண்மையை வெளிக் கொண்டு வர சட்டரீதியாக தொடர்ந்து போராடுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தக் கடிதம், ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார். ஆனால் செந்தில் பாலாஜி சட்டப்பேரவை உறுப்பினராக தொடர்ந்து நீடிப்பார்.
இவருக்கு ஜாமீன் கிடைக்காமல் போக. இவர் அமைச்சராக நீடித்தது ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
தற்போது அமைச்சர் பதவியை ராஜினாமா (Resignation letter) செய்த நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.