Site icon ITamilTv

விஸ்வரூபம் எடுக்கும் செந்தில்பாலாஜி விவகாரம் – உச்சநீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை

Spread the love

இருதய பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன் அதிமுகவில் அமைச்சராக இருந்தபோது தொடரப்பட்ட சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் திமுகவில் தற்போது மின்சாரத்துறை அமைச்சராக இருந்து வந்த செந்தில் பாலாஜியை கடந்த சில நாட்களுக்கு முன் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரவோடு இரவாக கைது செய்தனர் .

அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்ததில் ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் செந்தில் பாலாஜிக்கு உடனடியாக பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர் . இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்வதற்காக செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது குடும்பம் வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியது.

நீதிமன்ற உத்தரவின்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். அமலாக்கதுறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு வரும் 21-ஆம் தேதி பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. அமலாக்கத்துறை தாக்கல் செய்த இந்த மேல்முறையீடு மனு ஜூன் 21ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுக்கும் செந்திபாலாஜியின் விவகாரத்தில் ஒரு பக்கம் தமிழக அரசும் மறுபக்கம் அமலாக்கத்துறையும் பனிப்போர் நடத்தி வருவதால் இந்த பிரச்சனை எங்கு போய் முடியப்போகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Spread the love
Exit mobile version