கொரோனா குமார் படத்தில் நடிக்க காசு வாங்கிவிட்டு நடிக்காமல் காலம் தாழ்த்தி வந்த நடிகர் சிம்புவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகர், பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட நடிகர் சிம்பு, இயக்குனர் கோகுல் இயக்க இருந்த கொரோனா குமார் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பத்தம் செய்துள்ளார். இதற்காக முன்பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தான் தயாரிப்பதாக இருந்தது. கடந்த 2021-ம் ஆண்டு இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தாலும், இந்த படத்தின் வேலைகள் நடைபெறாமலேயே இருந்து வந்தது.
அதற்கு முன் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் வெளியாகிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெற்றியை கொடுத்தது. இதையடுத்து அவர் கொரோனா குமார் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிகர் சிம்பு கமிட் ஆனார்.
இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கொரோனா குமார் படத்தில் நடிக்க நடிகர் சிம்புவுக்கு ரூ.4.5 கோடி முன்பணமாக கொடுக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், இந்த நிலையில் அப்படத்தில் நடிக்காமல் சிம்பு வேறு படங்களில் கவனம் செலுத்தி வருவதாக வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வருகிற செப்டம்பர் 19-ம் தேதிக்குள் ரூ.1 கோடிக்கான உத்தரவாதத்தை சிம்பு அளிக்காவிட்டால் அவர் மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.