சென்னை, கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“பாஜக நிர்வாகிகள் சென்னை, பார்த்தசாரதி கோயில் அருகே வாக்காளர்கள் பட்டியல் திருத்த பணிகளுக்காக முகாமிட்டிருந்த பாஜகவினரை திமுகவினர் தாக்கி உள்ளனர். பாஜக நிர்வாகிகளை அரசு தொடர்ந்து கைது, பொய் வழக்கு பதிவு செய்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது பாஜகவினர் மீது திமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக தற்போது ஒரு கூட்டணியில் இருக்கும் போது இன்று நடைப்பெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் தன்னிச்சையாக இன்று தாங்கள் காட்டுபவர்தான் பிரதமர் என கூறி உள்ளார். அப்போது அவர் காங்கிரஸ் தலைமையையும், ராகுல்காந்தி பிரதமர் என்பதையும் முதலமைச்சர் ஏற்றுக் கொள்ளவிலையா.? கூட்டணியில் இருந்து கொண்டு முதலமைச்சர் தன்னிச்சையாக இத்தகைய கருத்தை கூறி உள்ளார். இந்தியா கூட்டணியை உடைக்கும் பணியை முதலமைச்சர் இன்று தொடங்கி உள்ளார்.
வி.பி.சிங் சிலை திறப்பது வரவேற்கத்தக்கதுதான். பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி உள்ளனர். பிகார் அரசு அதனை மேற்கொள்ளும் போது தமிழக அரசு ஏன் செய்ய முடியாது? வெற்று வார்த்தைகளை பேசுவதை விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும். தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பை முன்னெடுக்க வேண்டும்.
முதலமைச்சர் யாரை பிரதமராக கூறுகிறார் என்பதுதான் கேள்வி. அகிலேஷ், மம்தா இல்லை உதயநிதி ஸ்டாலினை பிரதமராக்க வேண்டும் என கூறுகிறாரா. இந்தியா கூட்டணி நிலைப்புத் தன்மை இல்லாத கூட்டணி.
மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு மக்கள் வரவேற்பு உள்ளது அங்கு பாஜகதான் ஆட்சியமைக்கும். ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜகதான் ஆட்சியமைக்கும். தெலங்கானாவில் பாஜகதான் ஆட்சியமைக்கும். மிசோரமில் பாஜகதான் ஆட்சியமைக்கும்.
சமூகநீதி காவலராக தங்களை கூறிக் கொள்ளும் திமுக அதனை முன்னெடுக்க வேண்டும். மத்திய அரசு பாஜக தற்போது அதுகுறித்து கூறவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பில் இதுவரை எந்த முடிவையும் மத்திய அரசு கூறவில்லை.
250 ஆம்புலன்ஸ்க்கு 40 கோடி ரூபாய் கால்நடை ஆம்புலன்ஸ்காக கொடுக்கப்பட்டு ஒரு வருடமாகிறது. ஆம்புலன்ஸ் இயக்கும் செயல்முறைக்கான நிதி மத்திய மாநில அரசுக்கு 60:40 பங்கீட்டில் இயக்கப்பட வேண்டும். அதற்கான நடைவடிக்கைகள் தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
அரசியலமைப்பு சட்டமசோதா அன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவகையில்தான் உள்ளது. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தி கொண்டு வருவது அவசியமான ஒன்றுதான். அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்பதுதான் பிரதமரின் ஒரே எண்ணம். பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு பிரதமர் மோடிதான் அங்கீகாரம் அளித்தார்.
சேரி என்பது ஒரு ஊரைத்தான் குறிக்கும். 3 நாட்கள் அதுகுறித்து விவாதிக்க வேண்டுமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். காங்கிரஸினரிடம் இன்னும் சாதிய வண்மம் உள்ளது. (சேரி பட்டியல் இனமக்கள் வசிக்கும் பகுதி என்று கூறியதாக கேட்கப்பட்ட கேள்விக்கு) குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்தான் அங்கு இருப்பார்கள் என்பது கிடையாது. சேரியில் அனைத்து சமுதாய மக்களும் வசிக்கிறார்கள். பட்டியல் இனமக்கள்தான் அங்கு வசிக்கிறார்கள் என்பது தவறான எண்ணம்.
திரைப்படங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும், தேசத்திற்கும், இறையாண்மைகும் எதிரான கருத்துகள் தடைசெய்யப்படும். அவ்வாறான காட்சிகளில் வரும் திரைப்படங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். ஓடிடி தளங்களுக்கு சென்சார் இல்லையென்றாலும் அவர்கள் சுயகட்டுப்பாட்டில் செயல்பட வேண்டும். எந்த வயதினர் பார்க்கலாம் என்கிற சுயகட்டுப்பாடு அடிப்படையில் சுயசான்றிதழ் வழங்கப்படுகிறது. அதனை பின்பற்றவில்லையென்றால் அரசு தலையிடும் சூழல் வரும்” எனத் தெரிவித்தார்.