இந்திய குடிமகனாக மாறுவதற்கு முன்பே வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தியின் பெயர் இடம் பெற்றதாக, பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா குற்றம்சாட்டியுள்ளார்.
ஆகஸ்ட் 7 ஆம் தேதி ராகுல் காந்தி பாஜக வாக்கு திருட்டு செய்துள்ளதாக குற்றம் சாட்டியதை தொடர்ந்து புதிய விவாதம் எழுந்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களின் உதாரணங்களை மேற்கோள் காட்டி, “ஒரு கோடி மர்ம வாக்காளர்கள்” இருப்பதாகவும், சிசிடிவி காட்சிகளை அழித்ததாகவும், வாக்காளர் தொடர்பான தரவுகளைப் பகிர தேர்தல் ஆணையம் மறுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
வாக்காளர் பட்டியலில் உள்ள முறைகேடுகள் குறித்த காங்கிரஸ் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில், இந்திய குடியுரிமை பெறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்தியாவில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டதாக பாஜக ஐடி பிரிவுத் தலைவர் அமித் மாளவியா குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது X பதிவில், “இந்திய வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தியின் பெயர் இடம்பெற்றது, தேர்தல் சட்டத்தை வெளிப்படையாக மீறும் செயல். இது, தகுதி இல்லாத மற்றும் சட்டவிரோத வாக்காளர்களைச் சட்டப்பூர்வமாக்கும் ராகுல் காந்தியின் விருப்பத்தையும், ‘சிறப்பு தீவிர திருத்தம்’ (Special Intensive Revision – SIR) என்ற செயல்முறைக்கு அவர் எதிர்ப்பையம் விளக்குகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

உண்மை என்ன?
ஜனவரி 1, 1980-ல் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில், டெல்லி மக்களவை தொகுதியில் (Polling Station 145, Sl. No. 388) சோனியாவின் பெயர் இணைக்கப்பட்டது. அப்போது அவர் ஒரு இத்தாலிய குடியுரிமையாளராகவே இருந்தார். 1982 – ல் பொது எதிர்ப்பின் காரணமாக, அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. 1983 – ல் புதுப்பித்த பட்டியலில் அவரது பெயர் மீண்டும் குடியுரிமை பெறுவதற்கு முன்பே சேர்க்கப்பட்டது. 30 ஏப்ரல் 1983 ல் இவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.
சட்ட விளக்கம்:
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 – பிரிவு 16(1)(a) படி, இந்திய குடியுரிமை இல்லாதவர் வாக்காளர் பட்டியலில் சேர தகுதியற்றவர். அதாவது, குடியுரிமை பெறாத காலத்தில் பெயர் சேர்த்தல் சட்டத்துக்கு முரணானது. மேலும், ஒரு வாக்காளர் பட்டியலில் சேர வேண்டிய நிபந்தனைகளுக்கு எதிராக சோனியாவின் பெயர் இணைக்கப்பட்டதாக சட்டம் தெரிவிக்கிறது. இது section 16-ன் கீழ் தேர்தல் சட்ட மீறலாக கருதப்படுகிறது.
இருப்பினும், 2021 -ல் உச்சநீதிமன்றம் அவரை சட்ட ரீதிக்குட்பட்ட வாக்காளர் என ஒப்புதல் அளித்தது. அவருக்குக் கிடைத்த குடியுரிமைச் சான்றிதழ் ரத்துசெய்யப்படாத வரை அவர் இந்தியப் பிரஜை என்றே கருத வேண்டும் எனவும் தெளிவாகக் கூறியது. இதுபோன்ற தவறுகள் தேர்தல் அலுவலர்களால் திருத்தப்பட வேண்டும்; குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டுமானால், முறையான சான்றுகளும், நோக்கத்துடன் தவறான தகவல் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்களும் தேவைப்படும்.
குறிப்பு: அந்த காலகட்டத்தில் (1980கள் தொடக்கம்) வாக்காளர் பட்டியல் பராமரிப்பு பெரும்பாலும் கையெழுத்து/இயல்படிவ முறைகளில் நடந்தது; திருத்தங்கள் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் “தகுதி நாள்” (அப்போது பொதுவாக ஜனவரி 1) அடிப்படையில் நடத்தப்பட்டன.
காங்கிரஸ் பதில்:
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாரிக் அன்வர், வாக்காளர் பட்டியலில் தனது பெயரைச் சேர்க்குமாறு சோனியா காந்தி கேட்கவில்லை என்றும், அந்தக் கால தேர்தல் ஆணைய அதிகாரிகள்தான் அவ்வாறு கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பு… அது ஒரு அரசியலமைப்பு அமைப்பு… அது அதன் சொந்த முடிவுகளை எடுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
