ITamilTv

அரசு கல்லூரிகளில்.. பட்டப்படிப்பு நிறுத்த இது ஒரு காரணமா.. விளாசிய ராமதாஸ்!!

Spread the love

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக் குறைவைக் காரணம் காட்டி இளம் அறிவியல் (பி.எஸ்சி) கணிதம், இயற்பியல் பட்டப்படிப்புகளை நிறுத்தக்கூடாது; ஒரு மாணவர் சேர்ந்தாலும் நடத்த வேண்டும்என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் மாணவர் சேர்க்கை குறைந்ததைக் காரணம் காட்டி, 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளம் அறிவியல் (பி.எஸ்சி) கணிதம் பட்டப்படிப்பையும், ஒரு கல்லூரியில் இயற்பியல் படிப்பையும், இன்னொரு கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் படிப்பையும் நிறுத்துவதற்கும், அவற்றுக்கு மாற்றாக மாணவர்களிடம் அதிக வரவேற்பு உள்ள புதிய பட்டப்படிப்புகளை தொடங்குவதற்கும் கல்லூரிக் கல்வி இயக்குனரகம் அனுமதி அளித்திருக்கிறது. மாணவர் சேர்க்கைக் குறைவு என்ற ஒற்றைக் காரணத்தை மட்டும் வைத்துக் கொண்டு பட்டப்படிப்புகளை நிறுத்துவது அதிர்ச்சியளிக்கிறது.

மாணவர்களிடம் அதிக வரவேற்பு உள்ள, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் புதிய பட்டப்படிப்புகளைத் தொடங்குவது வரவேற்கத்தக்கது தான். ஆனால், அது கூடுதல் நடவடிக்கையாக இருக்க வேண்டுமே தவிர, கணிதம் பட்டப்படிப்பை மூடிவிட்டு, வேறு படிப்பை தொடங்க வேண்டிய தேவையில்லை. கணிதப் படிப்புக்காக ஏற்கனவே ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டுள்ள நிலையில், கணிதம் பட்டப்படிப்பையும் தொடர்ந்து நடத்திக் கொண்டே, புதிய பட்டப்படிப்புகளையும் தொடங்கி நடத்துவதற்கு அரசு கல்லூரிகளின் நிர்வாகங்களுக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். மாணவர்கள் குறைவு என்பதற்காக பட்டப்படிப்புகளை நிறுத்தக் கூடாது. ஒரே ஒரு மாணவர் சேர்ந்தாலும் அவருக்காக அந்தப் படிப்பு நடத்தப்பட வேண்டும்.

இளம் அறிவியல் கணிதப் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்பது உண்மை தான். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கணிதப் படிப்பில் சேர கடுமையான போட்டி நிலவும்; அதிக மாணவர்களை சேர்ப்பதற்கு வசதியாக மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்படும். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருப்பது வேதனையளிக்கிறது. கணிதப் பாடம் கடினமானதாக இருப்பதால் அதில் சேர மாணவர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது. அது மட்டும் தான் காரணமா, அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா? என்பது குறித்து தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஆராய வேண்டும்.

கணிதப் படிப்பை புறக்கணிப்பது வரும் காலங்களில் உயர்கல்வியில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தும். அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு கணிதம் தான் அடிப்படை ஆகும். எனவே, கணிதம் கற்றலை இனிமையாக மாற்றுவது, கணிதம் படிப்பவர்களுக்கு கூடுதல் கல்வி உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கணிதம் படிப்பதை தமிழக அரசு உறுதி செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்


Spread the love
Exit mobile version