வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தின் நாகை, காரைக்கால், சென்னை உள்பட ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வடக்கு வங்ககடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நேற்று வடக்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வங்கதேசத்தின் கேபுபராவுக்கு தென்கிழக்கே 200 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது மேலும் தீவிரமடைந்து இன்று மாலை வங்கதேச கடற்கரை அருகே, கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்கத்தின் குறுக்கே மேற்கு – வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் நாகை, காரைக்கால், சென்னை கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், மற்றும் புதுச்சேரி ஆகிய ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் கடலில் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருவதால் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.