Site icon ITamilTv

“கனமழை நிவாரணம்” : ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000? தமிழக அரசு முக்கிய முடிவு!!

Spread the love

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மழை நின்று 5 நாட்கள் ஆகியும் பல இடங்களில் இன்னும் வெள்ளநீர் வடியாமல் உள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

முன்னதாக, தமிழக அரசு கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதும் சில மணி நேரங்களில் பெருமழை கொட்டித் தீர்த்ததனால் நான்கு மாவட்டங்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

இதனால், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து வீட்டு உபயோகப் பொருள்கள் பழுதாகி, மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், கார், பைக் உள்ளிட்ட வாகனங்களும் நீரில் மூழ்கின.

இந்த கனமழையால் மக்கள் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்படைந்துள்ள நிலையில், வெள்ள நிவாரணத்துக்காக தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 5060 கோடி பணம் கேட்டு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

அதையடுத்து, மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதி மூலம் 450 கோடி ரூபாயை விடுவித்தது. மேலும், சென்னை வெள்ள மேலாண்மை திட்டம் மூலம் 561.29 கோடி ரூபாயும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு வழங்கும் நிவாரணத்தை பொறுத்தே நிவாரண உதவிகள் வழங்க முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்த படி, மறுசீரமைப்பு, நிவாரணம் தொடர்பாக இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அந்த கூட்டத்தில், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 30 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு ரேஷன் அட்டைகளுக்கும் தலா ரூ.4000 வழங்கலாமா அல்லது ரூ.5000 வழங்கலாமா என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாகவும், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Spread the love
Exit mobile version