அரியலூரில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில், இதுபோன்ற உயிரிழப்புகள் இனிமேல் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு உடனடியாக குழு ஒன்றை அமைத்து, பட்டாசு விற்பனை கடை மற்றும் குடோன்களில் ஆய்வு செய்து உரிய முறையில் கண்காணிக்க வேண்டும் என்று விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியிருப்பதாவது..
“அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே வெற்றியூரில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உடல் சிதறி உயிரிழந்தார்கள் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
கடந்த சனிக்கிழமை அத்திப்பள்ளியில் நடந்த பட்டாசு விபத்தில் 14 பேர் உயிரிழந்த சம்பவத்தின் வடு இன்னும் ஆறாத நிலையில், மீண்டும் மற்றோரு வெடி விபத்தில் 11 பேர் பலியாகி இருப்பது மேலும் வேதனை அடைய செய்துள்ளது.
தீபாவளிக்கு இன்னும் நாட்கள் உள்ள நிலையில், அரசின் கவனக்குறைவால் இத்தனை உயிர்களை நாம் இழந்திருக்கிறோம். இதுபோன்ற உயிரிழப்புகள் இனிமேல் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு உடனடியாக குழு ஒன்றை அமைத்து, பட்டாசு விற்பனை கடை மற்றும் குடோன்களில் ஆய்வு செய்து உரிய முறையில் கண்காணிக்க வேண்டும்.
வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கினால் மட்டும் போதாது, அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” எனக் கூறியுள்ளார்.