Site icon ITamilTv

காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க அதிகாரிகளுக்கு தடை? செய்தியை திரித்து கூறுவது சரியல்ல: தமிழ்நாடு அரசு!

Cauvery Committee Meeting Cauvery TN Govt TN Govt

Cauvery Committee Meeting Cauvery TN Govt TN Govt

Spread the love

காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை’ என பிரபல நாளிதழில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, காவிரி குழு கூட்டத்தில் தமிழ்நாடு அதிகாரிகள் காணொலி மூலமும் நேரிலும் கலந்துகொண்டுதான் வருகிறார்கள் என விளக்கம் அளித்துள்ளது. மேலும், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் திரித்து கூறுவது சரியல்ல தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் அனைத்து கூட்டங்களிலும் தமிழ்நாடு அரசு சார்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் நேரிலோ அல்லது காணொலி காட்சி மூலமாகவோ தொடர்ந்து பங்கேற்று தமிழ்நாட்டின் வாதங்களை வலுவாக முன்வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இன்றே கடைசி நாள்.. indian oil corporation-ல் சூப்பர் அறிவிப்பு!

டெல்லியில் நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டங்களிலும் தொடர்ந்து பங்கேற்று தமிழ்நாட்டிற்கு உரிய நீர் பங்கினை பெறுவதற்கு தேவையான கருத்துகள், தக்க புள்ளி விவரங்களுடன் வலுவாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 94வது கூட்டம் புதுச்சேரியில் 21.03.2024 அன்று நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டின் அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் உண்மைக்கு புறம்பாக “காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை“ என்ற செய்தி 16.05.2024 நாளிட்ட பிரபல நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இதுபோன்று தமிழ்நாடு அரசு எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கவில்லை என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

பன்மாநில நதிநீர் பிரச்சனை தொடர்புடைய கூட்டங்களில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டு தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட தகுந்த வாதங்களை எடுத்துரைத்து வருகின்றனர். மேலும், அக்கூட்டங்களில் நேரில் கலந்துகொள்ள தமிழ்நாடு அரசு தேவையான அனுமதியை உடனுக்குடன் அளித்து வருகிறது. இவ்வாறு இருக்கையில் செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் திரித்து கூறுவது ஒரு பிரபலமான நாளிதழுக்கு உகந்ததல்ல.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version