ITamilTv

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு : சிசிடிவி கேமரா பதிவு எங்க .. ? அரசு வழக்கறிஞர்களிடம் நீதிபதி சரமாரி கேள்வி

Crime Investigation Kallakurichi Srimathi Death Case

Spread the love

மாணவி ஸ்ரீமதியின் மரண வழக்கில் பள்ளி ஆசிரியர்கள், தாளாளர் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் பதிவு மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை முழுமையாக வழங்கப்படாதது குறித்து அரசு வழக்கறிஞர்களிடம் நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தாலுகா, கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி,பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வந்த நிலையில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இருந்து பள்ளி ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகாவை விடுவிக்கப்பட்டது.

இந்த நிலையில் , நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இருந்து விடுவிக்கப்பட்ட பள்ளி ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகாவை மீண்டும் வழக்கில் சேர்க்க வேண்டியும் ,வழக்கு தொடர்புடைய ஆவணங்கள், ஆதாரங்களை மிகவும் தெளிவான முறையில் வழங்க வேண்டும் என்று மாணவியின் தாயார் செல்வி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கு: விசாரணையை கையில் எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

அப்போது பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகிய மூவரும் ஆஜராகவில்லை. மாணவி தாய் செல்வி நேரில் ஆஜரானார். முன்னதாக கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், மாணவியின் தாய் செல்வி தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், இன்று அரசு தரப்பு வழக்கறிஞர் தேவசந்திரன் பதில் விளக்கம் அளித்தார்.

அப்போது, மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி தரப்பில் கேட்கப்பட்ட, சம்பவம் நடந்த நாளன்று பள்ளி நிர்வாகத்தினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் பதிவு மற்றும் பள்ளி ஆசிரியர்கள், தாளாளர் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் பதிவு மற்றும் ஏற்கனவே வழங்கப்பட்டு ஓப்பன் ஆகாத 26 சிசிடிவி கேமரா பதிவுகளை முழுமையாக வழங்க வேண்டும் என்று அரசு தரப்பிற்கு நீதிபதி வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், சிசிடிவி காட்சி ஓப்பன் ஆகாதது குறித்து, அதற்கான வல்லுனர்களைக் கொண்டு, ஆய்வு செய்து அதற்கான உரிய விளக்கத்தை தாக்கல் செய்ய அரசு தரப்பிற்கு நீதிபதி உத்தரவிட்டு, இந்த மனு மீதான விசாரணையை வரும் ஜூன் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டுள்ளார்.


Spread the love
Exit mobile version