மது போதையில் சிக்கித் தவிக்கும் இளைஞர்களை மீட்க அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில்,
இதுகுறித்து அண்மையில் சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார். அப்போது, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் நடத்தப்பட்டு வரும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.
அதன்படி, வரும் ஜூன் 3 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி 500 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தற்போது 5,289 மதுபானக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்ற பட்டியலை டாஸ்மாக் நிர்வாகம் தயார் செய்து உள்ளது.
அதன்படி குறிப்பாக பள்ளி, கல்லூரிகள், கோயில்களின் அருகே உள்ள 500 மதுபானக்கடைகளை மூட அரசு முடிவு செய்துள்ளது.
முன்னதாக, கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் 500 மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த 169 மதுக்கூடங்கள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.