திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப்பதிவு முகாம்கள் இன்று வரும் 24ம் தேதி தொடங்கி இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப்பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளதாகவும், முதல் கட்ட விண்ணப்பப்பதிவு முகாம் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை (24.07.2023 – 04.08.2023) வரை நடைபெறும் என்றும், இரண்டாம் கட்டமுகாம் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை (05.08.2023 – 16.08.2023) வரை நடைபெறும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் கூறியுள்ளார்.
அதன்படி, நியாய விலைக்கடைப் பணியாளர், முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றை வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்குவார். இந்த டோக்கன் வழங்கும் பணியானது முகாம் நடைபெறுவதற்கு 4 நாட்களுக்கு முன்பாகத் தொடங்கும்.
இந்த விண்ணப்பங்களைப் பெறுவதற்காக பொதுமக்கள் நியாய விலைகடைக்கு வரத்தேவையில்லை என்றும், குடும்ப அட்டை இருக்கும் நியாய விலைக்கடைப் பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.