அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் இன்று திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த 50% வரி உயர்வால் திருப்பூரின் பின்னலாடை தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் இதிலிருந்து மீள்வதற்கு மத்திய அரசு நிவாரண நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் பங்கேற்றன.
இதில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, “சிலம்பை உடைத்து என்ன பயன்? அரியணையிலும் அதே கள்வன்”. 50 சதவீத வரி. 50 சதவீத வரியை டிரம்ப் போடவில்லை. வரியை போடச் சொன்னதே மோடிதான்.
இது நம் தேசத்தின் மீது நடத்தப்படுகிற போர். பஹல்காம் தாக்குதல் நடப்பதற்கு 2 நாள் முன்பாகவே, பாகிஸ்தான் தாக்குதல் நடத்த போவதற்காக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்ததாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

நம் அண்டை நாடு பாகிஸ்தான். ஆனால், நம் மீது தாக்குதல் நடத்துவதை எங்கோ இருக்கும் அமெரிக்கா சொல்லும் வரை நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று கேட்டேன்.
இந்தியா – பாகிஸ்தான் போரை நான் தான் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துவைத்தேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை கூறினார். அது உண்மையா பொய்யா என்று கூட பிரதமர் சொல்லவில்லை.
இந்தியா மீதான 50% வரிவிதிப்பு குறித்து தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த, அமெரிக்கா அமைச்சர் பீட்டர் நவ்ரோ, உக்ரைனில் நடப்பது மோடி போர். இந்தியாவில் நடப்பது பிரமாணிய சுரண்டல் எனப் பேசியுள்ளார்.

மோடியும், அமித் ஷாவும் இந்தியாவை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அம்பானியும், அதானியும் இந்தியாவை வாங்குகிறார்கள். இதன் நீட்சிதான் அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி” எனக் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள், அமெரிக்காவின் வரிவிதிப்பு ஏற்படுத்தும் பாதிப்பு குறித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் உரையாற்றினர்.
