திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கிரிவலம் செல்ல 20 ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அனைத்து கோவில்கள் மூடப்பட்டு, பின்னர் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டு கோவில்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகின்ற மகா கார்த்திகை தீபத்திருவிழாவில், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி, நீதிபதி சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி நேற்று வரை 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டார்கள், தீபத் திருவிழாவிற்கு 20 லட்சத்திற்கு மேலானவர்கள் வருவார்கள், 3 லட்சம் பேர் கிரிவலம் செல்வார்கள், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்தார்.
இதனை அடுத்து அனைத்து மாநிலங்களிலும் அனுமதிக்கப்படும் போது தமிழகத்திலும் அனுமதிக்க வேண்டும் எனவும், 20 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பரணி தீபம் ஏற்றும் நிகழ்வில் கட்டளைதாரர்கள் 300 பேரை அனுமதிக்கலாம் என்றும், இன்றும் நாளையும் கிரிவலத்திற்கு உள்ளூரை சேர்ந்த 5 ஆயிரம் மற்றும் வெளியூரை சேர்ந்த 15 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கோவிலுக்குள் அனுமதிக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள் மாநில அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என வலியுறுத்தியதுடன், அரசின் விளக்கத்தையும், கோவிலுக்குள் அனுமதிக்க முடியுமா என்பது குறித்தும் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.