வாகனங்கள் மீதான வரி உயர்வு அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசன், வாகனங்களுக்கான வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இயங்கூர்திகள் வரிவிதிப்பு திருத்தச் சட்டம் நிறைவேற்றம் :
தமிழகத்தின் அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் வரியை உயர்த்துவதற்கான சட்ட மசோதா சட்டசபையில் நேற்று நிறைவேறியதை அடுத்து தமிழக சட்டசபையில் போக்குவரத்துத் துறை சிவசங்கர் இயங்கூர்திகள் வரிகள் திருத்தச் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.
அதன்படி, சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பஸ்கள், அனைத்து வகை புதிய மற்றும் பழைய 2 சக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்டவாகனங்களுக்கு புதிய வரியை நிர்ணயிக்கப்படுகிறது.
குறிப்பாக படுக்கையுடன் கூடிய ஆம்னி பஸ்களுக்கு 4,000 ரூபாய் வரை வரி உயர்த்தப்படுகிறது.புதிய இருசக்கர வாகனங்களுக்கான வாழ்நாள் வரி 12% மற்றும் புதிய வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி, இருசக்கர வாகனங்களுக்கு 375 ரூபாய், இலகுரக வாகனங்களுக்கு 2,250 ரூபாய் மற்ற வாகனங்களுக்கு 3,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாகனங்கள் மீதான வரி உயர்வு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..
தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் வாகனங்களுக்கான வரி உயர்வை அறிவித்திருக்கிறார். தமிழக அரசின் நிதி நிலையை உயர்த்துவதற்காக, வரியை உயர்த்துவது சரியானதாக இருந்தாலும்கூட அதிலும் ஒரு நியாயம் இருக்க வேண்டும். இந்த வரி உயர்வால் ஏழை, எளிய மக்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுவார்கள்.
சரக்கு வாகனம், வாடகை வாகனம், பயணிகள் போக்குவரத்து வாகனங்களுக்கு வரி உயர்த்துவதால் அந்த உயர்வு மக்களின் தலையில் மேலும் ஒரு சுமையாக சேரும். சரக்கு மற்றும் வாடகை வாகனங்களுக்கு வரியை உயர்த்தும்போது அந்த வரி உயர்வை பலமடங்காக வாகனத்தின் வாடகையிலும், வியாபாரிகள் பொருள்களின் மீதும் விலையை உயர்த்துவார்கள். இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
அதேபோல இருசக்கர வாகனங்களுக்கு வரியை உயர்த்துவது சரியான முடிவல்ல. இவ்வாறு அனைத்து வகை வாகனங்களுக்கும் வரியை உயர்த்தும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சகம், மாநில சாலைகளை முறையாக பராமரிக்கிறதா என்றால் இல்லை. எனவே தமிழக அரசும், போக்குவரத்து துறையும் மக்களின் நலன் கருதி வாகனங்கள் வரி உயர்வை மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.