விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு 3 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், தாயில்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் (25.7.2023) எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் விஸ்வநத்தம் கிராமத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி, மற்றும் மண்குண்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பானு, ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு. அவர்களது குடும்பத்தினருக்கு தலா 3 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.