Site icon itamiltv.com

ஆற்காட்டில் சோகம்: ஐஸ்கிரீம் கடை தீ விபத்தில் தம்பதி பலி – நடந்தது என்ன?

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் ஐஸ்கிரீம் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்காடு அடுத்த தேவிநகர் பகுதியில் “மகாவீர் ஐஸ்கிரீம்” என்ற கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் உரிமையாளரான பவன்லால் மற்றும் அவரது மனைவி சுந்தரி இருவரும் திங்கள்கிழமை அதிகாலை ஐஸ்கிரீம் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக கடையின் உள்ளே இருந்த மின்சார வாகனத்தின் பேட்டரி திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது.

இந்த வெடிப்பின் காரணமாக உடனடியாக தீப்பற்றியது. சில நிமிடங்களில் தீ கடை முழுவதும் பரவி கரும்புகை சூழ்ந்தது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆற்காடு மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே சிக்கியிருந்த தம்பதியை மீட்டனர்.ஆனால் இருவரும் பலத்த தீக்காயங்களுடன் இருந்ததால் உடனடியாக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த துயர சம்பவம் குறித்து ஆற்காடு நகர காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேட்டரி வெடிப்பு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தொழில்நுட்ப ரீதியாகவும் ஆய்வு நடைபெற்று வருகிறது.

அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version