தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரை பாரபத்தியில் இன்று நடைபெறுகிறது. நேற்று இரவு முதலே லட்ச கணக்கான தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
நடிகரும் அரசியல்வாதியுமான தவெக தலைவர் விஜய் புதன்கிழமை இரவு மதுரை வந்தடைந்தார். விஜய்யின் பெற்றோர்களும் இன்று காலை அரங்கிற்கு வந்து சேர்ந்துள்ளனர்.
மாநாட்டில் சுமார் நான்கு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் எனவும் சமீபத்திய ஆண்டுகளில் மிகப்பெரிய அரசியல் கூட்டங்களில் ஒன்றாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் குடிநீர் வசதிகள், மருத்துவ உதவி மற்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு காலை உணவு மற்றும் தின்பண்டங்களும் வழங்கப்பட்டு வருகிறது.
நிகழ்ச்சி நிரல்:
இந்த நிகழ்ச்சிகள் பிற்பகல் 3:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை நடைபெற இருக்கிறது. தஞ்சாவூர் மற்றும் மதுரையைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர்களின் கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் சிலம்பாட்டம் உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகளுடன் தொடங்க உள்ளது. மாநாட்டில் தவெக தலைவர் விஜய் 45 நிமிடங்கள் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆழமான வரலாற்று மற்றும் அரசியல் பாரம்பரியத்தைக் கொண்ட மதுரையைத் தேர்ந்தெடுத்திருப்பது, தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும் TVKயின் நோக்கத்தை பிரதிபலிக்கிறது என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்த மாநாடு நடைபெறும் நிலையில், இது ஒரு திருப்பு முனையாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.