தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு இன்று மதுரை பாரபத்தியில் நடைபெறுகிறது. 500 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த நிகழ்வில், நான்கு லட்சத்திற்கும் அதிகமான பேர் கலந்து கொள்வார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிலையில், மாநாடு தொடங்குவதற்கு முன்பே லட்ச கணக்காண மக்கள் அங்கு குவிந்துள்ளனர். சில தொண்டர்கள் முந்தய நாள் இரவே திடலுக்கு வந்து காத்திருக்கின்றனர். பள்ளி மாணவர்கள் வர வேண்டாம் என அறிவித்த பிறகும் ஆயிரக்கணக்கான மாணவர்களும் குவிந்த வண்ணம் உள்ளனர்.
100 அடி கொடிக்கம்பம்:
இந்த மாநாட்டிற்கான முன்னேற்பாடுகளும் பலமாக நடந்து முடிந்தது. குறிப்பாக, 100 அடி கொடிக்கம்பம் வைக்கப்பட்டது. ஆனால், விஜய் கொடி ஏற்றயிருந்த அந்த கொடிக்கம்பம் திடீரென சரிந்து விழுந்தது. இருப்பினும், உயிர் சேதம் ஏதும் பெரிதாக ஏற்படவில்லை. அதை தொடர்ந்து மின்விளக்கு கம்பமும் சரிந்து விழுந்தது. இதனால், பாதுகாப்பு குறைபாடு குறித்த கேள்வி எழுந்துள்ளது.

மாநாட்டிற்கு வருபவர்களுக்கு நிபந்தனை:
மாநாட்டிற்கு வருபவர்களுக்கு காவல்துறை சார்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியோர், உடல் ஊனமுற்றோர் வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நடிகர் விஜயும் இதே கோரிக்கையை தனது அறிக்கை வாயிலாக தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் வைத்துள்ளார். இது குறித்து தொண்டர்கள், தவெக தலைவர் விஜயை பார்க்க முடியாத தங்களது மனவேதனையும் தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய அறிவிப்பு வெளியாகுமா ?
முதல் மாநாட்டில், எங்களுடன் கூட்டணி வருபவர்களுக்கு ஆட்சியில் பங்கு அளிக்கப்படும், என தெரிவித்த பிறகும் எந்த கட்சியும் விஜய் பக்கம் செல்லவில்லை. எனவே இரண்டாவது மாநில மாநாட்டில், முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதற்கட்ட வேட்பாளர் அறிவிப்பு ?
வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் மாநாட்டில் அறிவிப்பதற்கான முடிவில் விஜய் இருந்ததாக கூறப்படுகிறது. முக்கிய கட்சிகள் கூட்டணிக்கு வராத நிலையில், 234 தொகுதிகளிலும் ஒரே சின்னம் என்ற முழக்கத்துடன் வேட்பாளர்களை அறிவிக்கும் யோசனையில் விஜய் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த முடிவு மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளதாக தவெக தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.