Site icon ITamilTv

மக்களவையில் தேர்தல் சீர்திருத்த மசோதா தாக்கல்: எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு..!

Spread the love

தேர்தல் சீர்திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்ததற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஒரே வாக்காளர் நாட்டின் பல்வேறு இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை தடுக்கவும், போலி வாக்காளர்களை நீக்கவும், கள்ள ஓட்டுகளை தடுக்கவும், தேர்தல் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்யும்படி ஒன்றிய அரசிடம் தேர்தல் ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இதனையடுத்து,‘தேர்தல் சட்ட திருத்த மசோதா -2021’,க்கு ஒன்றிய அமைச்சரவை சில தினங்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், முறைகேடுகளை தடுப்பதற்காக வாக்காளர் பட்டியலுடன்  ஆதார் எண் இணைக்கப்பட உள்ளது. மேலும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களுக்கு தற்போதுள்ள ஒரு முறைக்கு பதிலாக, ஆண்டுக்கு 4 முறை வாக்காளர் பட்டியலில் சேர வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை தற்போது நடைபெறும் நாடாளுமன்ற குளிர்கால தொடரிலேயே நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த தேர்தல் சீர்திருத்த மசோதாவிற்கு எதிர்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைப்பதால் தனிநபர் ரகசியம் திருடப்படும் அபாயம் இருப்பதாக கூறியும், இதில் மத்திய அரசின் உள்நோக்கம் இருப்பதாகவும் கூறி, மக்களவையில் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.


Spread the love
Exit mobile version