Site icon ITamilTv

”நந்தினி நிறுவனத்திடம் இருந்து பால் கொள்முதல்..” அவசியம் என்ன ?..- அண்ணாமலை கேள்வி!!

Spread the love

சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமே மழையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தின் பிற மாவட்ட விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யாமல், வெளி மாநிலத்தில் இருந்து பால் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.

சென்னையில் ‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டு 450-க்கும் மேற்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதிகளில் வசித்த பொதுமக்கள் குடிநீர், உணவு, மின்சாரம் இன்றி சில நாட்கள் தவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தமிழக அரசு பல்வேறு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் சென்னையில் பாலுக்கு பல்வேறு இடங்களில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்கள் பல இடங்களில் பால் பாக்கெட்டுகளுக்காக சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..

கடினமாக உழைக்கும் தமிழக விவசாயிகளை வஞ்சிப்பதை, திமுக அரசு தொடர்ந்து வருவது கண்கூடு. இப்போது ஒரு படி மேலாக, ஆவின் நிறுவனம், தமிழகத்தின் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யாமல், சுமார் இரண்டரை லட்சம் லிட்டர் அளவுக்கு, கர்நாடக மாநில நந்தினி நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமே மழையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தின் பிற மாவட்ட விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யாமல், வெளி மாநிலத்தில் இருந்து பால் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்ன விலைக்கு பால் கொள்முதல் செய்யப்பட்டது என்ற விவரங்களை, அமைச்சர் மனோதங்கராஜ் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

வெளி மாநிலத்தில் இருந்து பால் கொள்முதல் செய்தும், சென்னையில் பல்வேறு பகுதிகளில் பால் தட்டுப்பாடு என்று மக்கள் அவதிப்பட்டதை மறைத்து, ஆவின் நிறுவனத்தின் பால் விநியோகம் பாதிக்கப்படவில்லை என்கிறார் அமைச்சர் மனோதங்கராஜ்.

கேள்வி கேட்டால் அவதூறு பரப்பும் வழக்கமுள்ள அமைச்சர் மனோதங்கராஜ் மீது ஏற்கனவே அவதூறு வழக்கு தொடர நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். இந்தக் கேள்விகளுக்காவது அவதூறு பரப்பாமல் நேரடியான பதிலைச் சொல்ல அமைச்சர் முன்வர வேண்டும் என்று அண்ணாமலை கடுமையாக குற்றமசாட்டியுள்ளார்.


Spread the love
Exit mobile version